மட்டக்களப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான பால்மா பக்கட்டுகள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடியில் பல சரக்கு கடைகள் இரண்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பால்மா பக்கட்டுக்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் இன்று மீட்கப்பட்டன.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் மேற் கொண்ட திடீர் சோதனை நடவடடிக்கையின் போதே குறித்த பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட பால்மா பக்கட்டுக்கள் உடனடியாகவே பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

காத்தான்குடி பெரிய சந்தைக் கட்டிடத்திலுள்ள பல சரக்கு கடையொன்றிலும், புதிய காத்தான்குடி பாம் வீதியிலுள்ள பல சரக்கு ஒன்றிலுமாக இரண்டு கடைகளில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளிள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

குறித்த சோதனை நடவடிக்கையின்போது வியாபாரிகளால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு அவ்விடத்திலேயே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்தே,  குறித்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.