அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு பந்தம் பிடிக்கும் அங்கஜனின் கருத்தை முக்கியமாக கருதவேண்டிய அவசியமில்லை!

தற்போதைய அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு பந்தம் பிடிக்கும் அங்கஜனின் கருத்தை முக்கியமான விடயமாக  கருத வேண்டிய அவசியமில்லை  என்று நாடாளுமன்ற உறுப்பினரும்  தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்  இராமநாதன்  “ஜெனிவா என்பது நாடகமென“ தெரிவித்திருந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு அவர்களுக்கு பந்தம் பிடிப்பவரே அங்கஜன் இராமநாதன், அவர் நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். கடந்த தேர்தலில் அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்தமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.ஆனால் அடுத்த தேர்தலில் அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

இதேவேளை, தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் அண்மையில் இணைந்து பேசி ஒருமித்து அறிக்கையொன்றை அனுப்ப வேண்டுமென தீர்மானித்திருந்தோம். ஆனால், அது இழுபறி நிலையில் இருந்ததால், இன்னும் காலம் தாழ்த்த முடியாது என்பதற்காக எஞ்சியிருந்த  கட்சிகளை இணைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

எங்களுடைய அறிக்கை ஒருமித்து சென்றிருந்தால் அது நல்லதுதான். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அதனை செய்ய முடியாது போனாலும் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு  தெரியப்படுத்தவேண்டியது முக்கியமானது.

எமக்குள் இருக்கும்  பிரச்சினைகளுக்காக முரண்பட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முழுமையான விடயங்களை வழங்கவேண்டும்  எனத் தெரிவித்தார்.

இந்தவிடயத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் நல்லது.

அடுத்தமுறை  இணைந்து செயற்படுவோம் என்கிற நம்பிக்கை எமக்குள்ளது என்று மேலும் தெரிவித்தார்.