நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படும் சாத்தியமில்லை: அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

தற்போது அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியமில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த ஒரு மாதகாலமாக அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்  காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு, மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

இதனால், அடுத்த வாரம் முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாட்டை திறந்து பொருளாதாரத்தினை மேம்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

அதேவேளை, நாடு திறக்கப்படும்போது, தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.