இதனாலேயே அவசர காலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது : அங்கஜன் இராமநாதன்

தற்போதுள்ள இக்கட்டான நிலையில் நுகர்வோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, நுகர்வோர் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் அவசரகால சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஐ.நா சபைக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில்வழங்கியபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலையில், நாட்டின் பொருளாதாரத்தினை முன்னிலைப்படுத்தி செயற்படுவதுதான் மிக மிக அவசியமானது.
மக்களை மேலும் மேலும் திசை திருப்பாமல் எம்மால் முடிந்தவற்றை செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வர வேண்டும்.

மக்கள் தற்போதைய கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.