கப்ராலின் வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க தீர்மானம்

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் உருவாகும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள அஜித் நிவாட் கப்ரால், பதவியிலிருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை இன்று  நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளார்.

இந்நிலையில், அஜித் நிவாட் கப்ரால்  பதவி விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு  ஜயந்த கெடகொட நியமிக்கப்படவுள்ளார்.

ஜயந்த கெடகொட ஏற்கனவே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர், தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக தனது உறுப்புரிமையிலிருந்து விலகியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பதவி விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கபரால் எதிர்வரும் 16 ஆம் திகதி, இரண்டாவது முறையாக மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.