முல்லைதீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் நில அபகரிப்பு முயற்சி?

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை பெரும்பாண்மை இனத்தவர்கள் சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த நில அபகரிப்பு முயற்சியானது  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,  குறித்த காணிப் பிணக்கு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடுவதெனவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு, கரைதுறைபற்றுப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், பூமடுகண்டல் பகுதி என்பது தமிழர்களின் பூர்வீக மானாவாரி வயல் நிலங்களாகும்.

அப்பகுதி மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு தமது பகுதிகளிலிருந்து இடம்பெயரும் வரையில்  420 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் நீண்டகாலம் இடப்பெயர்ந்து வாழ்ந்த கொக்குத் தொடுவாய் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த 2011 ஆம் ஆண்டில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியமர்த்தப்பட்ட பின்னரும் குறித்த வயல் நிலங்களில் தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் தற்போது அப் பகுதியில் பெரும்போக மானாவாரி நெற்பயிற்செய்கைக்கான ஆயத்தப்பணிகளில்  ஈடுபடும்போது, வெலி ஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் அதற்கு இடையூறு விளைவிப்பதுடன், குறித்த விவசாய நிலங்களில் தாம் பயிற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில்  அப்பகுதித் தமிழ் மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அதற்கமைய  குறித்த பகுதிக்குச் சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோர் நிலைமைகளை ஆராய்ந்தனர்.

அப்போது அங்கு பெரும்பாண்மை இனத்தவர்கள் பலர் குறித்த பூர்வீக வயல்நிலங்களை அபகரிக்கும் நோக்கோடு துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் வாய்த்தர்கங்கள் இடம்பெற்றதுடன் அபகரிப்பு முயற்சியும் தடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அப் பகுதிக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் வருகை தந்திருந்தார். குறித்த உத்தியோகத்தருக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து, பிறிதொரு நாளில் மாவட்ட செயலகத்தில்  குறித்த காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.