சாய்ந்தமருதில் அனாவசியமாக நடமாடியோர்மீது அண்டிஜென் பரிசோதனை மேற்கொண்டதால் பொதுமக்கள் விமர்சனம்.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.நியாஸின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் அனாவசியமாக நடமாடியோர்மீது அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைகளுக்காக தாங்கள் வெளியேறிய போது அதனை கவனத்தில் கொள்ளாது பாதுகாப்பு படையினரை முன்னிலைப்படுத்தி தங்களுக்கு அண்டிஜென் பரிசோதனை செய்ததாகவும், உள்வீதிகளில் வைத்து  இப்பரிசோதனையை செய்வதாகவும் குறிப்பிட்டு பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் போது தக்க காரணங்களின்றி  வீதிகளில் நடமாடியவர்கள்மீதே அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து கோவிட் தொற்றுநோய் பரவுதலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை பகிரங்கமாக கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, குறித்த சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பணியாளர்கள் கொரோனா தொற்றுநோய் பரவுதலை கட்டுப்படுத்த பிந்திய இரவு நேரம்வரை அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.