மட்டு. புன்னக்குடா கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

நேற்று 11.09.2021 சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் தைக்கா பள்ளிவாயல் வீதியைச்சேர்ந்த 15 வயதுடைய முகமட் றமீஸ் முகமட் சஜாத் என்ற சிறுவனே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் தரம் 9 வகுப்பைச்சேர்ந்த இம்மாணவன்  தனது பாடசாலை நண்பர்கள் ஐந்து பேருடன் கடல்குளித்துவிட்டு    கரை வந்துள்ளார்.  பின்னர் இவர் மீண்டும் பத்து நிமிடங்கள் குளிக்கப்போவதாகக்கூறி கடலின் தூரப்பகுதிக்குச் சென்று ‘தைரியமிருந்தால் யாராவது இவ்விடத்திற்கு வாருங்கள்” என்று ஏனையவர்களையும் அழைத்துள்ளார்.

அதிலிருந்து சற்று நேரத்தில் அவர் பாரிய அலையில் சிக்குண்டு காணாமல் போனார். பின்னர் மீனவர்களின் பிரயத்தனமான தேடுதலையடுத்து சடலம் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டது.
பின்னர் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நடைபெற்ற   பிரேத பரிசோதனையினையடுத்து ஜனாஸா நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டதாக திடீர் மரணவிசாரணயதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் தெரிவித்தார்.

மரணமடைந்தவர் நான்கு பிள்ளைகளுடைய குடும்பத்தில் இரண்டாம் பிள்ளையாவார். ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.