இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை : நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

கொவிட் 19 தொற்றுநோய் பரவலினால் இலங்கையும் ஏனைய உலக நாடுகளைப் போல பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பாரிய பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இவ்வாண்டின் இறுதியில் 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிபிசி உலக சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்தியாவசியப் பொருட்கள் களஞ்சியங்களில் போதிய அளவில் காணப்படுகின்றன. எனினும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இவ்வாறான பதுக்கள் முயற்சிகளை தடுக்கும் நோக்கம் அரசுக்கு இருப்பதாக  அமைச்சர் கூறினார்.

உணவு நெருக்கடி ஏற்படாத அளவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக உத்தரவாதம் வழங்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்