மன்னார் பெரியமடு குளத்தில் 4 இலட்சம் இறால் குஞ்சுகள் விடுவிப்பு

கொரோனா தொற்று காலத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மன்னார் பெரியமடு குளத்தில் 4 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் குறித்த இறால் குஞ்சுகளை விடும் நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவி ஆணையாளர் கனகரத்தினம்  திலீபன், வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள், தேசிய நீர் உயிரின வளர்ப்பு  அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மன்னார் மெசிடோ நிறுவன ஊழியர்கள் மற்றும் பெரியமடு நன்னீர் மீன்பிடி சங்கத்தின் அங்கத்தினர்கள்  கலந்து கொண்டனர்.

மீன் வளத்தை அதிகரிக்கவும் நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் மெசிடோ நிறுவனத்தினால் இவ்வாறான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதற்கான இறால் குஞ்சுகள் தேசிய நீர் உயிரின வளர்ப்பு  அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்படுகிறது.

அதேவேளை, இம்மாதகாலத்தினுள் கிளிநொச்சி மன்னார் ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட குளங்களில் மேலும் 3 இலட்சம் இறால் குஞ்சுகள் விடுவதற்கான ஏற்பாடுகள் மெசிடோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட இருப்பதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்  பணிப்பாளர்  யாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.