ரஞ்சனிற்கு மன்னிப்பு வழங்க கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஜனாதிபதிக்கு கடிதம்

08 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

நாட்டின் மூத்த பிரஜை மற்றும் முன்னாள் அரச தலைவர் என்ற ரீதியில் தாம் இக்கோரிக்கையை விடுப்பதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க மாரதுங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர், சமூக சேவகர் மற்றும் அரசியல்வாதி என்றவகையில்  ரஞ்சன் ராமநாயக்க பொது மக்களுக்கான சேவைகளை ஆற்றிவந்த ஒருவர் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாரிய குற்றங்களை புரிந்து சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பலருக்கு, தற்போதைய அரசினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாரிய குற்றமல்லாத விடயத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நான்குவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.