மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு நிவாரண விலையில் பொருட்கள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், சதோச வர்த்தக நிலையத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அத்தியாவசிய தேவைக்கான பொருட்களையும் நிவாரண விலையில் வழங்கிவருகின்றனர்.

வாணிக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது மட்டக்களப்பு நகர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் சதோச திறக்கப்பட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் நிவாரண விலையில் பெற்றுக்கொடுக்கப்படுமென வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இந்த சதோச விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு, கள்ளியங்காடு உணவுக் களஞ்சியசாலையில் சத்தோச விற்பனை நிலையமானது திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சதோச நிறுவனங்களின் தலைவர் ரியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அ.நவேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சதோச விற்பனை நிலையம் ஊடாக சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கான பொருட்களும் வழங்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் மாவட்டத்தில் எதிர்காலத்தில் எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் மக்களுக்கு பொருட்களை விநியோகிக்ககூடிய நிலையுள்ளது.