கூட்டமைப்பு கடந்த காலத்தில் தீர்வுக்காக முன்வைத்துள்ள அதே விடயங்களையே மீளவும் முன் வைப்பதில் எவ்வித பயனுமில்லை.(ஹென்றி மகேந்திரன்)

( துறையூர் சஞ்சயன் ) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசுவதில் தவறில்லை. ஆனால் கூட்டமைப்பு கடந்த காலத்தில் தீர்வுக்காக முன்வைத்துள்ள அதே விடயங்களையே மீளவும் முன் வைப்பதில் எவ்வித பயனுமில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆட்சியிலும் அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை நடக்கிறதே தவிர எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லையே என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஊடாக மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் அதே வேளை அதிகாரப் பகிர்வு குறித்த அடுத்த நகர்வுக்கு செல்லவும்
வேண்டும். போராடிக் கிடைத்த உரிமைகளைப் பொருட்படுத்தாமல் மத்தியரசின் கீழ் செல்ல வேண்டுமென சிந்திப்பது, 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.

தேசிய பாடசாலைகள் என்ற பெயரிலும் வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துதல் என்ற பெயரிலும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படுவதுடன், நகர அபிவிருத்தி அதிகார சபை நகர விரிவாக்கம் என்ற பெயரில் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதும் நிறுத்தப்படல் வேண்டும்.

தேசிய அரசாங்கத்துக்குரிய மாகாணத்துக்குரிய பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீதிகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடி கடல் சார் என இலங்கையிலுள்ள ஒவ்வொரு துறையும் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக இருக்கின்ற ஒரு பிரிவினர் மாகாண சபை துறைகளிலுள்ள அபிவிருத்தி வளங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன என்றடிப்படையில், தேசிய அரசாங்கத்துக்குரிய துறைகள் கூடிய வள அபிவிருத்தியை கொண்டுள்ளதாக கருதுகின்றனர்.

மத்திய அரசாங்கத் துறைகள் கூடிய வள அபிவிருத்தியை பெற்றுள்ளதனால் மாகாண சபைத் துறைகளுக்கு மாகாண சபையினால் வளங்களை பகிரமுடியாத நிலையில், மாகாண சபை வளத்தைக் கொண்டு உச்ச நிலைக்கு முயற்சிக்கிறபோது இரு துறைகளுக்குமான
ஏற்றத்தாழ்வு வரும்போதுதான் பாடசாலை, வைத்தியசாலை உட்பட பல்வேறு துறைகள் மத்தியரசின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருந்து எழுகின்றன. ஆகவே மத்திய அரசாங்கத்தின் வளங்களுக்கேற்ப மாகாண சபையின் வளங்களும் உயர்த்தப்பட வேண்டும்.

ஒரு சமூகம் கல்வி அறிவு ரீதியாக வளர்ச்சியடையும்போது பொருளாதார அபிவிருத்தியும் அறிவும் வளர்ச்சியடையும். அறிவு வளர்ச்சியடையும் போது தன்னுடைய இனத்தை பாதுகாக்கும் நோக்கில் வளர்ச்சியடைய முடியும். அதுவும் படித்த சமூகமாக வரும்போது
ஏனைய நன்மைகளும் கிடைக்கப்பெற்று வளங்களை காப்பாற்றிக் கொள்வார்கள். வெளியில் இருந்து வருகின்ற ஆபத்தையும் தடுத்து நிறுத்தக்கூடிய கல்வியறிவுள்ள சமூகமாகவும் மாற்றமடையும்.

13 ஆவது திருத்தச்சட்டம் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியல் தீர்வை முன் வைப்பதால் அதனைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இருப்பினும் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அந்தச் செயற்பாடு இலங்கையரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடைமுறைச் சாத்தியமான 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முறையாக முழுமையாக நடைமுறைப்படுத்தும் படியும் மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென்றும், அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் இனப்பிரச்சினைக்குரிய நிரந்தர தீர்வான சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தைக் கோர வேண்டும் என்றார்.