முதலாளிகளை உருவாக்கி விவசாயிகளின் அடிவயிற்றில் கைவைக்கும் அரசாங்கம்

பாரியளவிலான நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில் நெல்லையும் சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில் இன்று அந்த நெல்லை பறிமுதல் செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துவருவதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத காரணத்தினாலும் அடுத்த விவசாய செய்கைக்கு தேவையான முளைநெல்லுக்காகவும் நெல் சேமித்துவைக்கப்படுவதாகவும் உரிய காலத்தில் நல்ல விலை கிடைக்கும்போது அவை விற்பனை செய்யவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இன்று அவ்வாறு நெல்லை வைக்கமுடியாது என விவசாயிகளின் களஞ்சியங்களை முற்றுகையிடும் நுகர்வோர் அதிகார சபையினரால் அவை சீல் வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

காலம்காலமாக அறுவடைசெய்யும் நெல்லை களஞ்சியப்படுத்தி வைத்து விதைப்பு நடவடிக்கைகளுக்கு பின்னரே குறித்த நெல்லை விற்பனை செய்வதாகவும் தாங்கள் நெல்லை வியாபார நோக்கில் வாங்கி களஞ்சியப்படுத்தவில்லையெனவும் தங்களது உழைப்பினால் கிடைத்தவற்றையே சேமித்து வைத்திருந்ததாகவும் விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்.

இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.