தமிழ்த்தேசிய கொள்கையில் உறுதியுடன் செயற்பட்ட சோமசுந்தரத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாது.(பா.அரியநேத்திரன்)

(துறையூர் சஞ்சயன் )அமரத்துவம் அடைந்த இளையதம்பி சோமசுந்தரம் சட்டத்தரணி தமிழ்தேசிய கொள்கையுடன் இறக்கும் வரை இருந்தார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கொரோனா நோயால் உயிரிழந்த சட்டத்தரணி சோமசுந்நதரத்தின் பிரிவு தொடர்பாக மேலும் கூறுகையில்,

எருவிலை பிறப்பிடமாக கொண்ட அமரர் இளையதம்பி சோமசுந்தரம், பாடசாலையில் படிக்கும்போதே இனப்பற்றும் தமிழ்பற்றும் உள்ள ஒருவராக திகழ்ந்தார்.

ஆங்கில ஆசிரியராக, முதல் நியமனம் பெற்ற இவர், தமது மண வாழ்க்கையை எனது அக்காவை அம்பிளாந்துறையில் திருமணம் செய்து அவரின் சொந்த ஊரான எருவிலிலேயே வாழ்க்கை நடத்தினர்.

ஆங்கில ஆசிரியராக இருந்துகொண்டே அவரின் திறமையால் சட்டத்தரணியாக பதவியேற்று, மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார்.

2000, ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக தமிழர் விடுதலை கூட்டணியில் மட்டக்களப்பு மாவட்ட எட்டு வேட்பாளர்களில் ஒருவராக களம் இறங்கினார். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றியீட்டாவிட்டாலும் தமிழ்த் தேசிய பற்றாளராக தொடர்ந்தும் உழைத்தார்.

2004, ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நான் வேட்பாளராக களம் இறங்கிய வேளையில் எனது வெற்றிக்காக அயராது பாடுபட்டார்.

அதேபோல் 2010, பொதுத்தேர்தலிலும் எனது வெற்றிக்காக உழைத்தார். தொடர்ச்சியாக 2015, 2020 பொதுத் தேர்தல்கள் 2012, மகாணசபை தேர்தல் 2018, உள்ளூராட்சிசபை தேர்தல் எல்லாவற்றிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக பல கூட்டங்களில் உரையாற்றி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஓயாது செயல்பட்டார்.

2012, ஆம் ஆண்டு இலங்கைத்

தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாநாடு

தேவநாயகம் மண்டபத்தில்

இடம்பெற்றபோது பல அச்சுறுத்தல்கள், தடைகள், குண்டுத்தாக்குதல், கறுப்பு கொடிகளை கட்டி அடக்க நினைத்த ஒட்டுக்குழு அடாவடிகளுக்கு எல்லாம் எங்களுடன் உறுதுணையாக நின்று மாநாட்டை சரிவர நடத்த உதவியவர்களுள் சட்டத்தரணி சோமசுந்தரத்தின் பங்கு அளப்பரியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினராக 2012 ம் ஆண்டு தொடக்கம் 2019, வரை மிகவும் உறுதியாக செயல்பட்டார்.

இறுதியாக 2020, பொதுத்தேர்தல் இடம்பெற்றபோதும் அவரின் உடல் நிலை காரணமாக நேரடியாக பொதுப் பிரசாரங்களில் ஈடுபடாவிட்டாலும் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பாக என்னிடம் பல ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரு தமிழ்த்தேசிய பற்றாளனாக தமிழ்தேசிய உணர்வாளனாக வாழ்ந்து இக்கட்டான பல காலங்களில் உயிர் அச்சுறுத்தல்களை தாங்கி வாழ்ந்த நேர்மையான ஒப்பற்ற தலைவரை இழந்துள்ளோம்.

எமது அக்காவை திருமணம் செய்து நான்கு பிள்ளைகளை ஈன்று, கல்வி அறிவு ஊட்டி வளர்த்து இரண்டு பெண் பிள்ளைகளை

சட்டத்தரணிகளாக்கியும்

இரண்டு ஆண் பிள்ளைகளை பொறியியலாளர்களாக்கியும், அவர்களின் உயர்ச்சிக்கு அடித்தளம் இட்ட நல்ல குடும்பத் தலைவரை நாம் இழந்துள்ளோம்.

மொத்தத்தில் சிறந்த ஆளுமை அறிவு ஜீவியாகவும் சோரம் போகா உறுதியான தமிழ்தேசிய பற்றாளராகவும் வாழ்ந்து வழிகாட்டிய

சோமசுந்நதரம், 74 ஆவது

அகவையில் கொடிய கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நேரடியாக அஞ்சலி செலுத்த முடியாத மனவேதனையுடன் உறவினர் நாம் தவிக்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்பதுடன் அன்னாரின் மறைவை யொட்டி தொலைபேசி மூலமாகவும் இணையத்தள முகநூல் ஊடாகவும், நேரடியாகவும் அஞ்சலிகளை தெரிவித்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதாக மேலும் கூறினார்.