சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிசங்கரி தவராஜாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத வெற்றிடம்.(த.தே. கூ. மட்டு. மாவட்ட முன்னாள் பா. உ ஞா.ஸ்ரீநேசன்.)

 

( துறையூர் சஞ்சயன் ) இருட்டறைகளாக இருந்த சட்டவறைகளில் ஒளிபாய்ச்சிய தீபமொன்று அணைந்துவிட்டது. பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிஷங்கரி தவராஜாஇ தனது சட்ட ஆளுமை மூலமாக பெண்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழர்கள் மத்தியிலும் ஓர் இரும்புப் பெண்மணி போல் துணிச்சல் மிக்கவராகவும் நல்லவராகவும் வல்லவராகவும் திகழ்ந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சிரேஷ்ட வழக்கறிஞர் கௌரிஷங்கரியின் மறைவு தொடர்பான அனுதாபச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பில் பயங்கரமான காலத்தில் தமிழர்கள் சார்பான சிக்கலான வழக்குகளைக் கையாள்வதற்குத் தயங்கிய காலத்தில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவும் அவரது துணைவியாரான கெளரி சங்கரியும் தைரியமாக நின்று வழக்காடிப் பல வழக்குகளில் வெற்றி வாகை சூடினார்கள்.

கணவனும் மனைவியும் சட்டப்பணியில் நம்பிக்கை தரக்கூடிய சட்டத்தரணிகளாகவும் சட்டப் புலமையாளர்களாகவும் திகழ்ந்தார்கள். மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதச்சட்டத்தின் பிடியில் தமிழர்கள் அகப்பட்டு துன்ப துயரங்களோடு சிறைகளில் வாடிய வேளைகளில் தாமாக அவ்வழக்குகளில் தோன்றி சிக்கல்களான முடிச்சுகளை அவிழ்த்தும், அறுத்தும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த குடும்பத்தின் இரு புலமையாளர்களில் ஒருவரை இழந்து விட்டோம். இது தமிழர்களைப் பொறுத்தமட்டில் பாரிய இழப்பாகும்.

அதிலும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா, இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவராக இருந்து செயற்பட தமிழர்கள், தமிழ் இளைஞர்கள், யுவதிகளுக்காக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கெளரி சங்கரி ஆவார்.

இந்த நிலையில் அவரது வெற்றிடம் நிரப்பப்படாது விட்டால், அது தமிழர்களுக்குப் பாரிய இழப்புகளைத் தருவிக்கும். அதனை நிரப்ப வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு தமிழ்த் சட்டத்தரணிக்கும் உரியதாகும். அன்னாரின் அரும்பணிகளைப் பாராட்டுவோம். அவரது ஆத்மா சாந்தியடையவும் கணவர், உறவுகளின் மனங்கள் ஆறுதல் அடையவும் ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.