கொவிட் நிதியத்துக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. (இம்ரான் பா.உ)

(பைஷல் இஸ்மாயில்) கொவிட் நிதியத்துக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மருத்துவ உபகரணங்களுக்காக எமது கட்சி ஆரம்பித்துள்ள கொவிட் நிதியத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத சம்பளத்தை வழங்க முன்வந்ததை அடுத்து எம்மை பின்பற்றி சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தமது சம்பளத்தை வழங்க முன்வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.இதை ஆரம்பித்து வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்

மக்கள் இன்னல்களை எதிர்கொள்ளும்போது மக்கள் முன் வந்து ‘தென் செபத’ என கேட்க்கும் எதிர்க்கட்சியாக இல்லாமல் அவர்களின் இன்னல்களில் பங்கு கொள்ளும் எதிர்கட்சியே நாம்.

ஆனால் இதுபோன்று அரச ஊழியர்களும் தமது பாதி சமபளத்தை வழங்க வேண்டும் என விடுக்கும் கோரிக்கை நியாயமற்றது.இதுவரை இந்த அரசு அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவில்லை.நாம் இவர்களிடம் நாட்டை ஒப்படைக்கும் போது காணப்பட்ட பொருட்களின் விலையை விட இரண்டு மூன்று மடங்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலை உயர்வடைந்துள்ளது.
இந்த விலை உயர்வால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல அரச ஊழியர்கள் சம்பளம் பெற்று அடுத்த நாளே கடன் பெரும் சூழ்நிலையிலேயே உள்ளனர்.இவ்வாறிருக்க அவர்களிடம் எவ்வாறு பாதி சம்பளத்தை கேட்க முடியும்.

அன்றாடம் கூலி வேலை செய்ப்பவர்களின் நிலை இதைவிட மோசமாக உள்ளது.இன்று ஒரு வேலை உணவை கூட உண்ண முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.முடக்கப்பட்ட காலப்பகுதியில் இவர்களுக்கு 2000 ரூபா வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.இது ஒரு நாள் செலவுக்கு கூட போதாத பணம்.ஆனால் இந்த தொகையை கூட பெற தகுதி உடையவர்களின் பட்டியலை எடுத்து நோக்கினால் அதில் சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் கொடுப்பனவு பெறும் யாரும் இல்லை.மறைமுகமாக இந்த 2000 ரூபாவும் வழங்க முடியாது என்றே அரசு கூறுகிறது.

கடந்த காலங்களில் அரசின் கொவிட் நிதியத்துக்கு பல நாடுகளும் தனியார் நிறுவனகளும் தனவந்தர்களும் நன்கொடை வழங்கினார்கள்.அந்த பணத்துக்கு என்ன ஆனது? அதுதொடர்பான கணக்கு அறிக்கையை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை.இது இவ்வாறு இருக்க எதை நம்பி அரச ஊழியர்கள் தமது சம்பளத்தை வழங்குனர்கள்.

அரசினதும் அமைச்சர்களினதும் ஆடம்பர செலவுகளை குறைத்தால் பெரும்தொகை பணத்தை சேமிக்கலாம்.எனக்கு ரோஹித ராஜபக்ச அனுப்பிய செயற்கை கோளே இப்போது நினைவுக்கு வருகிறது.அந்த செயற்கை கோளுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியவில்லை.அந்த திட்டத்துக்கு 320 மில்லியன் செலவானதாக கூறப்படுகிறது என தெரிவித்தார்.