திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் மணல் அகழ்வு இடைநிறுத்தம்

(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு ஆற்றுப் பிரதேசத்தில் இடம்பெற்று வந்த மணல் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் கடந்த 13ந் திகதி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஆராயும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இடமபெற்று இருந்தன.

இதன்போது திருக்கோவில் பிரதேச பொது மக்கள் சார்பாக பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மணல் அகழ்வு தொடர்பாக எற்பட்டுவரும் பாதிப்புக்கள் குறித்து பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு இருந்ததுடன் அக் கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் எட்டப்பட்டு இருந்தன.

அதனடிப்படையில் இன்று (17) திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தனர்.

இதன்போது மணல் அகழ்வில் ஈடுபடும் நிறுவனங்கள் கூட்டத் தீர்மானங்களை முறையாக கடைப்பிடிக்காத நிலையில் மணல் அகழ்தல் மற்றும் வீதியால் ஏற்றிச் செல்லுதல் என்பன தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.