வாகரையில் தீ மிதிப்பில் கலந்து கொண்ட 30பேருக்கு கொவிட் தொற்று.

க.ருத்திரன்
 மட்டக்களப்பு வாகரை ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு உற்சவ வழிபாட்டில் கலந்து கொண்ட 30 பேருக்கு கொரோனா நோய் தொற்று  ஏற்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தகவல் தெரிவிக்கிறது.
கடந்த சனிக்கிழமையன்று மேற்படி ஆலயத்தில்  இறுதி உற்சவமான தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்று விழாக்கள் அனைத்தும் முடிவுற்றுள்ளது. இவர்களில் சிலர் வழமைக்கு மாறான நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 பேருக்கு  மேற்கொள்ளப்பட்ட  அன்ரிஜன் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து இன்று சனிக்கிழமை (14) மேலும் 65 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது 30 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாகரை பிரதேசத்தில் முதற் தடவையாக அதிகளவு எண்ணிக்கையானோர் கொரோனா நோய் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் வெள்ளிக்கிழமை வரைக்கும் 11550 நபர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாகரை சுகாதார வைத்திய அதிகாரி யோ.விவேக் தெரிவித்தார். குறித்த ஆபத்தான நிலமையினை கட்டுப்;படுத்தும் நடவடிக்கையில் வைத்திய அதிகாரி தலைமையில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.