மட்டக்களப்பில் மிக நீண்டகால போதைப்பொருள் வியாபாரிகள் கைது!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை காத்தான்குடியில்வைத்து
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார   தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி, 3 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள வீடொன்றில் வைத்தே இவர்கள் நேற்று (12) இரவு 9.00  மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்,

கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாவும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.