திருக்கோவில் பிரதேசம் கஞ்சிகுடிச்சாற்றில் இடம்பெறும் மண் அகழ்வு

(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் பிரதேசம் கஞ்சிகுடிச்சாற்றில் இடம்பெறும் மண் அகழ்வினால் பாதிப்பு  விவசாயிகள் குடியிருப்பாளர்கள் விசனம்.அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் தற்போது இடம்பெற்று வரும் பாரியளவிலான ஆற்றுமண் அகழ்வினால் விவசாயப் பாதைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருவதாக பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்து வருகின்றன.

இவ் விடயம் தொடர்பாக ஆராயும் கலந்தரையாடல் கூட்டம் ஒன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.

இதன்போது விவசாய அமைப்புக்கள் கிராம அபிவிருத்திச் சங்க நிருவாகிகள் மீனவர் சங்க அமைப்புக்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் ஆகியோருக்கும் அரச துறைசார் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்று இருந்தன.

திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் இருந்து சுமார் 4 கி.மிற்றர் தூரத்திற்கு ஆற்று மணல் அகழ்வுக்காக உதிதேசிக்கப்பட்டு மூன்று நிறுவனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டு மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இங்கு இடம்பெறும் பாரிய மணல் அகழ்வின் ஊடாக திருக்கோவில் பிரதேச மக்களின் வளம் அழிந்து போவதுடன் பிரதேச மக்கள் தமக்கான மணலை அதிக விலை கொடுத்தே பெற்று வருகின்றனர்.

இதேவேளை விவசாய பாதைகள் சேதமடைவதோடு கனரக வாகனங்கள் அதிக வேகத்துடன் ஒன்றின் பின் ஒன்றாக செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட சந்தர்ப்பங்கள் காணப்படுவதோடு புழுதி காரணமாக இங்கு வாழும் மக்களுக்கு சுவாச நோய்களுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மேற்படி அமைப்புக்களால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் இவ் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்ட பின்னர் மண் அகழ்வுக்கான வேலைகளை முன்னெடுக்குமாறு திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனிடம் பொது அமைப்பின் பிரதிநிதிகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

இவ் கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரதேச செயலக அதிகாரிகள் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் தம்பிலுவில் கமநல சேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வனபரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்ததுடன் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளில் ஒருசிலவற்றுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.