மட்டக்களப்பு மாநகர சபையின் சில கிளைகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்..

(சசி)

மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் கொரோனா தெற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து  சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாநகர சபையின் நிருவாக கொள்வனவு கிளைகள் உட்பட சில கிளைகள்  இன்று (10) ஆந் திகதி முதல் சில தினங்களுக்கு  மூடப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தி.சரவணபவான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் மற்றும் பீ. சி.ஆர் பரிசோதனைகளின் போது பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  சில மரணங்களும் சம்பவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சில அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையின் சில கிளைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .

மாநகர சபை செயற்பாடுகளை மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள் மாநகரசபைக்கு வருவதை தவிர்த்து இணையவழி மூலம் தங்களது சேவைகளை  பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.