மாமாங்க ஆலயம் 14 நாட்களுக்கு முடக்கம். தீர்த்தமாடியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை.

(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுகாதார தரப்பின் சுற்றுநிருபத்தை மீறி ஞாயிற்றுக்கிழமை (08ம் திகதி)  வருடாந்த தீர்த்தோற்சவ நிகழ்வில் கலந்துகொண்ட 500க்கு மேற்பட்ட அடியார்களை தனிமைப்படுத்த சுகாதார தரப்பினர் பொலிசாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
இதேவேளை இடம்பெற்ற இச் சம்பவம் சம்மந்தமாக மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாரசிங்க திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மண்முனை வடக்கு பிரதேச கொவிட் செயலணி கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கமைவாக, மாமாங்கேஸ்வரர் ஆலயம் 14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் ஆலய நிர்வாகத்திற்கெதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற தீர்த்தோற்சவ  சம்பவம் தேசிய ரீதியில் பலத்த கண்டனத்திற்கு உள்ளானதால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மண்முனை வடக்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.கிரிசுதன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் இணைதலைமையில் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற கூட்டத்தில் ஆலய நிர்வாகத்திற்கு கடந்த கொவிட் செயலணி கூட்டத்தில் வழங்கப்பட்ட சுற்று நிருபத்தை மீறி எதுவித முற்பாதுகாப்பும் இன்றி ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொண்ட இச் சம்பவமானது நகரின் பாரிய கொவிட் கொத்தணியை உருவாக்க ஏதுவாக அமைந்துள்ளது எனவும், 100பேருக்கு வழங்கிய அனுமதியை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இவ் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தார்.