கிழக்கு இளைஞர்கள் அமைப்பு ஸ்ரீலங்காவின் 3 ஆவது ஆண்டு பூர்த்தி விழா

(எஸ்.அஷ்ரப்கான் – )
கிழக்கு இளைஞர்கள் அமைப்பு ஸ்ரீலங்காவின் 3 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும் சர்வதேச இளைஞர் தின நிகழ்வும் இன்று (08) ஒலுவில் பீச் பார்க்கில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானீஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக “பாட்னர் போ சேஞ்ச் இன்டர்நேஷனல்” நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர், அரசியல் பிரமுகர் ரிஷாட் ஷரீப் அவர்களும்,
கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய, உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி நஸ்மியா ஜனூஸ் அவர்களும் சிறப்பு அதிதியாக கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஆலோசகரும் சமூக சேவை யாளருமான எஸ்.எல்.ஏ. நஸார் ஆகியோரும் மற்றும் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதம அதிதி சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் ரிஷாட் ஷெரீப் உரையாற்றும்போது,
கிழக்கு இளைஞர்கள் அமைப்பு என்பது சத்தியத்தின் பால் உள்ளது என்பதனை நான் சில விடயங்களை வைத்து அறிந்து கொண்டேன். நேற்று வரைக்கும் நீங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததை நான் உணர்வுபூர்வமாக அறிந்தேன். நீங்கள் சத்திய வாதியாக இருந்ததன் காரணமாக உங்களது சத்தியம் இன்று வென்றிருக்கின்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஒருவர் கலந்துகொள்ள இருந்தார். அவரது வேலைப்பளுவின் காரணமாக அவர் இன்று கலந்து கொள்ளவில்லை அவர் பற்றிய ஒரு விடயத்தை நான் கூற இங்கு விழைகிறேன் உண்மையிலேயே அது இளைஞர்களுக்கு பெரும் ஒரு எடுத்துக்காட்டான விடயமாகும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் ரமீஷ் அபூபக்கர் அவர்கள், தனது 43 வயதில் ஒரு பல்கலைக் கழகத்துக்கு உபவேந்தராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இவர் தெரிவு செய்த துறையே இதற்கு மிகவும் உந்துகோலாக இருந்திருக்கிறது.
சரியான துறையை சரியான நேரத்தில் அவர் தெரிவு செய்ததன் விளைவு தான் இன்று அவர் உச்சபட்ச உயர் பதவியை வகிப்பதற்கு காரணமாகும். படிக்கின்ற போது சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சையில் மிகத் திறமையான பெறுபேறுகளை இவர் பெற்றிருந்தாலும் கலைத் துறையை தெரிவு செய்ததும், அவரது பொருளாதார நிலைமையும் அவருக்கு இருந்த சவால்களும் காரணமாக அவர் கலைத் துறையை தெரிவு செய்து அதிலேயே முன்னேற்றம் கண்டு மிகச்சிறப்பாக சித்தி பெற்று இன்று உச்சபட்ச உயர்ச்சியை அடைந்து உபவேந்தராக வந்திருக்கின்றார். அவர் இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்
இதுபோன்றுதான் இளைஞர்களாகிய நீங்களும் தெரிவு செய்கின்ற துறைகள் படிக்கின்ற போது தெரிவு செய்கின்ற துறைகள் எங்களுக்கு இயலுமான பொருத்தமானதாக அமைய வேண்டும். அப்போதுதான் நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த உயர் நிலைகளை அடைய முடியும் என்றும் கூறினார்.
இங்கு கெளரவ அதிதி கல்முனை கல்வி வலய, உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி நஸ்மியா ஜனூஸ் மற்றும் பலரும் உரையாற்றினர்.