மட்டக்களப்பில் கொரனா தொத்தணிகள் உருவாகுமா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா கொத்தணிகள் உருவாகுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களில் மாவட்டத்தில் 1264பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 10பேர் மரணமடைந்துள்ளனர்.

கூடுதலான தொற்றுக்களாக மட்டுமாநகரப்பகுதிக்குள் 359பேர், செங்கலடி 285, களுவாஞ்சிக்குடியில் 134 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை கல்லடி இராமகிருஸ்ணன் மிசன் இல்லத்தில் சுவாமிகள் உட்பட 30பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வந்தாறுமூலைகிராமத்தில் 100ற்கும் மேற்பட்டோர் இருநாட்களில் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதுமட்டுமா  சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கடந்த 2ம்திகதிமுதல் 06ம் திகதிவரை நடைபெற்ற பயிற்சிநெறியில் கலந்துகொண்ட விவசாயத்துறைகளைச்சேர்ந்த 20பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்டவர்களின் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் தற்போது காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் தென்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை எல்லாவற்றையும் விட இன்று நடைபெற்ற மாமாங்க ஆடிஅமாவாசை தீர்த்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள அனுமதிவழங்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் மாமாங்கபிரதேசத்தில் 21பேர் கொவிட் தொற்றாளர்களான காணப்பட்ட நிலையில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம் அதிகாரிகளின் அசமந்தப்போக்கா? அல்லது மக்களின் கவலையினமா? அல்லது கொரனா தனிமைப்படுத்தல் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதா என்ற நிலை தோன்றியுள்ளது.