மட்டக்களப்பில் சேதனப் பசளை விவசாயம்” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

கிழக்கு மகாண ஆளுநர் செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கான “சேதனப் பசளை விவசாயம்” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது இன்று (07.08.2021) நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் கலந்து கொண்டார்.

ஜனாதிபதியின்  “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திற்கமைய , நாட்டின் விவசாய துறையை முழுமையாக சேதனப் பசளைக்கு  மாற்றுவது தொடர்பிலும், அது தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் தொடர்பிலும் தெளிவுறுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் அபிப்பிராயங்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் இக் கருத்தரங்கின் வளவாளராக யக்கலா ஆயுர்வேத விக்ரமராச்சி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஜனாதிபதியின் நஞ்சற்ற நாட்டை கட்டியெழுப்பும் விசேட செயலணியின் தலைவருமான பேராசிரியர் சமன் வீரக்கொடி அவர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய சேதனப் பசளை விவசாயம் தொடர்பில் தெளிவுறுத்தியிருந்தார்.

சேதனப் பசளை விவசாயம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாரை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின்  பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவதாக இதன்போது தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர், இன, மாத, மொழி, கட்சி சார் வேறுபாடுகளுக்கு அப்பால்  பொது மக்களுக்கான உன்னத பணிகளை தான் ஆற்றிவருவதாகவும், சூழழுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதோடு எதிர்கால சந்ததியினரின்  நல்வாழ்வினையும்  கேள்விக்குறியாக்கும், அசேதனப் பசளைகளுக்கு பதிலாக வழமான உற்பத்தியினை பேணும் சேதனப் பசளைகளை கிழக்கு மாகாணத்தில் பெருமளவில் உற்பத்தி செய்ய  அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசேகர, ஆளுநரின் செயலாளர் எல் பி. மதனநாயக்க, மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகர ஆணையாளர் மா. தயாபரன் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.