மருதூர் பிரீமியர் லீக் – இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தினர்  9 விக்கெட்டுகளால் முதலாவது போட்டியில் வெற்றி.

(எஸ்.அஷ்ரப்கான், யூ.கே.காலிதீன், நூறுள் ஹுதா உமர்)
சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் மருதூர் பிரீமியர் லீக் (எம். பி.எல் -2021)  கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வும்  முதலாவது போட்டியும்  இன்று (06) சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது.
எஸ்.எம்.றிழ்வான் தலைமையிலான  இம்பேசியல் நடுவர் சங்கத்தின் இணை  அனுசரனையில் பிரதேசத்தின் 32 முன்னணி கழகங்கள் பங்கு கொள்ளும் இச்சுற்றுப் போட்டியின் முதல் போட்டியில், சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து அட்டாளைச்சேனை பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் விளையாடியது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் முதலில்  துடுப்பாட்டத்தை ஏற்றுக் கொண்டு  துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை பிரான்ஸ் விளையாட்டு கழகத்தினர் 11.01 பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 64 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர்.
65 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தினர் 6.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர். 
இப்போட்டியில் ஆட்ட நாயகனாக சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் ஸல்பி தெரிவானார்.
இந்தப் போட்டிக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களும் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் சித்தார்த் லியனாராச்சி அவர்களும் விசேட அதிதிகளாக ஒய்வு பெற்ற விளையாட்டு அதிகாரி முஹம்மட் நபார், தொழிலதிபர் எம். நாஸர், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீட், சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் எம்.எச்.கே.காலிதீன் உள்ளிட்ட விளையாட்டு கழகங்களின் உறுப்பினர் களும் கலந்து கொண்டனர்.