வாழைச்சேனையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் சடலம்.

க.ருத்திரன்
உரப்பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்றிரவு (5) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பொதுச் சந்தை கடைத் தொகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இருந்தே பெண்ணின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை அல்லாப் பிச்சை வீதியைச் சேர்ந்த (55 )வயதுடைய முகம்மத் ஹனீபா சித்தி லைலா என , அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் வங்கிக்குச் சென்றபோது வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் முச்சக்கர வண்டி ஒன்றில் வங்கி நடவடிக்கைக்கு ஏற்றிச் சென்றதாகவும் அவரே பெண்ணை கொலை செய்திருக்கலாம் என பெண்ணின் கணவர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் மாவடிச்சேனை எம்.பி.சீ.எஸ்.வீதிலுள்ள வளர்ப்பு மீன் கடையில் வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் உரப்பையில் போட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று வாழைச்சேனையிலுள்ள கடையில் ஒன்றில் கொலை செய்த நபர் வைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வாழைச்சேனையிலுள்ள குறித்த கடை உரிமையாளரிடம் பை ஒன்றை கொண்டு வந்த நபர் அதனை தனது கடையில் வைத்து விட்டு சிறிது நேரத்தின் பின் எடுத்துச் செல்வதாக கூறி பையை வைத்துச் சென்றுள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

குடும்பத்துக்குள் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் முரண்பாடே இக் கொலைக்கு காரணம் என்று மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பெண்ணை கொலை செய்த நபரையும் பெண்ணின் சடலம் வைக்கப்பட்ட கடை உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த இடத்திற்கு வாழைச்சேனை மாவட்ட நீதி மன்ற நீதிவான் எம்.எச்.எம்.பசில் வருகை தந்து சடலம் வைக்கப்பட்ட கடை மற்றும் கொலை இடம்பெற்ற கடை ஆகிய இடங்களுக்கு சென்று நிலiமைகளை கண்டறிந்ததுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.பின்னர் உடற் கூற்றாய்விற்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது. சடலம் இருந்த இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யு.சி.என். வெல்கம மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.