33 வருட அரச சேவையாற்றி ஓய்வு பெற்றார் மக்களின் நன்மதிப்பை பெற்ற சாய்ந்தமருது ஏ.எம்.நிஸ்ரின் ஜீ.எஸ்.!

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த 33 வருட காலமாக கிராம உத்தியோகத்தராக கடமை புரிந்து கடந்த 2021.07. 29 அன்று சேவையிலிருந்து  ஓய்வு பெற்று சென்ற கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.நிஸ்ரினுக்கான பிரியாவிடை வைபவம் சாய்ந்தமருது  கிராம உத்தியோகத்தர் நலன்புரி ஒன்றியத்தினால் ஒலுவில் பறன் தோட்டத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது  பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஓய்வு பெற்று சென்ற கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.நிஸ்ரினுக்கான கௌரவிப்பை மேற்கொண்டார்.

ஆரம்பக் கல்வியை  அல் அமான் பாடசாலையிலும் பின்னர் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயம், கல்முனை சாஹிரா கல்லூரியிலும் மற்றும் வெலிகம அறபா மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்ற ஏ.எம்.நிஸ்ரின், 1988 ஆம் ஆண்டு பயிர்ச்செய்கை உத்தியோகத்தராக நியமனம் பெற்று உள்ளிருப்பு செய்யப்பட்டு 1989 ஆம் ஆண்டு கிராம உத்தியோகத்தர் ஆக சாய்ந்தமருது 10 ஆம் பிரிவில் கடமை செய்து கொண்டு சாய்ந்தமருது 9ம் பிரிவு 8-ஆம் பிரிவு 12-ஆம் பிரிவு 14 ஆம் பிரிவு 01ம் பிரிவு 03ம் பிரிவுகளில் பதில் கடமையாக கடமையாற்றிய திறமையான ஒருவராக இருந்துள்ளார்.

சமூக சேவைகளில் முன்னிற்று உழைக்கும் இவர் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளராகவும் சாய்ந்தமருது ஹாஜா ஜஹ்வர்ஷா மக்காம் நிர்வாகத்தில் தலைவராக இருந்து வழி நடத்தி கொண்டிருப்பதுடன் ஸ்ரீலங்கா எக்ஸத் கிராம உத்தியோகத்தர் அம்பாறை மாவட்ட சங்கத்தின் உப செயலாளராகவும், புனர்வாழ்வு புனரமைப்பு சமூக அபிவிருத்தி சங்கம் உட்பட பல சமூக சேவைகள் அமைப்பிலும் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். இவர் சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தர் காரியாலய முகாமைத்துவ போட்டியில் தொடர்ச்சியாக முதலாம் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது