ஆசிரியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு எங்கே…? மட்டுநகரில் போராட்டம்.

24 வருடகாலமாக நீடிக்கும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரி நாடளாவிய ரீதியில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் போராட்டமானது இன்றைய தினம் மட்டக்களப்பிலும் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்பொ. உதயரூபன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டப் பேரணியில் அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டப் பேரணியானது காந்திப் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் காந்திப் பூங்காவில் நிறைவுற்றிருந்தது.

இதன் போது, வாக்குறுதியளித்ததன் பிரகாரம் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வினைப் பெற்றுத் தா, அதிபர் ஆசிரியர்களைக் கௌரவப்படுத்து, அதிபர் ஆசிரியர் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக அங்கீகரி, 24 வருட அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, கல்வியில் இராணுவ மயமாக்கலை நீக்கு, அதிபர் ஆசிரியர் மாணவர்களின் மன அழுத்த செயற்பாடுகளை நிறுத்து, அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான உயர்நீதிமன்ற தீர்ப்பை அமுல்ப்படுத்து, கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்தை இரத்துசெய் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.