சாய்ந்தமருது றியலுள் ஜன்னாவுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்

பாறுக் ஷிஹான்

குவைத் நாட்டின் அல்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அல் நூர் சமூக அமைப்பினால் சாய்ந்தமருது கமு/ கமு/ றியலுள் ஜன்னா வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு  இன்று(1) ஞாயிற்றுக்கிழமை பாடசாலை  முன்றலில் நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள்,  பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர்  வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அல் நூர் சமூக அமைப்பு சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அல் நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றஸ்மியிடம்  அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ. எல். என். ஹுதா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய  பாடசாலை மாணவர்களினதும்,  பிரதேச மக்களினதும் பாவனைக்காக இவ்வேலைத்திட்டத்தை துரிதகதியில் முடித்து இன்று உத்தியோகபூர்வமாக பாடாசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

சாய்ந்தமருது கமு/ கமு/ றியலுள் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய மின் அத்தியட்சகர் ஆரிஸ் அக்பர், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ. எல். என். ஹுதா, அல் நூர் சமூக அமைப்பின் இணைப்பாளர், தொண்டர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ. அஹத், பிரதியதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.