கருணா அம்மானின் கட்சியும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவர்களின் இல்லத்தில் தீக்காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்த ஹிசாலியின் மரணத்திற்கு நீதி கோரி முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடக இணைப்பாளர் கி.லிங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள், மகளிர் அணியினர் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மையில் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு மரணித்த ஹிசாலி உட்பட இதற்கு முன்பும் இவ்வாறான துஸ்பிரயோகங்களுக்குள்ளான சிறுமியர்கள் மற்றும் யுவதிகளின் மரணங்களுக்கும் உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஜனாதிபதி அவர்களே இந்நாட்டில் இடம்பெறும் அப்பாவிகளின் கொலைக்கு நியாயமான நீதி வேண்டும், சிறுவர் துஸ்பிரயோககத்தினை உடன் நிறுத்துங்கள், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். முறையான விசாரணையினை முன்னெடுங்கள், பாலியல் துன்பறுத்தலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், சிறுவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந் நீதி கோரிய ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.