ரிசாட் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக அச்சிறுமிக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை

ரிசாட் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக அச்சிறுமிக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதனை விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டுமே தவிர இதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள். சிறுவர் துஸ்பிரயோகம் படுகொலை என்று இன்று ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்கள் அன்று மிருசுவில் படுகொலையில் பச்சிளம் சிறுமி, பெண்கள் உட்பட ஏழு பேரைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்காவை பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுவித்த போது எங்கே இருந்தார்கள்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இடம்பெற்ற துஸ்பிரயோகப் படுகொலைகள் மற்றும் எரிவாயு விலை நிர்ணயம் உட்பட மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் நீதி வேண்டி போராடுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஏடக சந்திப்பின் பொதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜுலை 25ம் திகதி இலங்கையில் எரிவாயுவின் விலை தீர்மானிக்கப்பட்டது. அதன்படி யாழ் மாவட்டத்தில் எரிவாயுவின் விலை 1259.00 ரூபா, மட்டக்களப்பில் 1250.00 ரூபா . ஆனால் அதே எரிவாயு கொழும்பில் 1130.00, கம்பஹாவிலே 1150.00 ரூபா.

வடக்கு கிழக்கிலே இருக்கும் எட்டு நிருவாக மாவட்டங்களுக்குமே எரிவாயுவின் விலை ஆகக் கூடியதாக இருக்கின்றது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் மாவட்ட மக்களின் அடிப்படை வருமானம் என்ற ரீதியில் பார்க்கும் போது வடக்கு கிழக்கு தான் மிகக் குறைந்த நிலையில் இருக்கின்றது. இந்த விலை வித்தியாசங்களுக்கான காரணம் தொடர்பில் விசாரித்த போது உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து மாவட்டங்களின் போக்குவரத்து தூரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். வடக்கு கிழக்கில் எரிவாயுவினை உற்பத்தி செய்யாமல் விட்டது எங்களினதோ, மக்களினதோ பிரச்சினை அல்ல. கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசத்தில் எரிவாயுவினை உற்பத்தி செய்து விட்டு எமது பிரதேசங்களுக்கு மாத்திரம் இவ்வாறு விலை அதிகமாகச் சொல்லுவது எந்த விதத்தில் நியாயமானது.

வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டாலும் மக்களின் செலவை மேலும் மேலும் அதிகரிக்கும் செயற்திட்டத்தைத் தான் இந்த அரசாங்கம் செய்கின்றது.

தமிழ்த் தேசியக் ட்டமைப்பு முன்வைக்கும் தேசியம் சார்ந்த பிரச்சினைகளான இனவிகிதாசாரத்தை மாற்றுவது, நிலங்களை அபகரிப்பது போன்ற பிரச்சினைகளில் தமிழ் மக்களது உரிமை சார்ந்து குரல்கொடுக்கும் வேளையில் இவ்வாறான அன்றாட பிரச்சினைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் அரசாங்கத்தோடு பிரச்சினைப் பட வேண்டிய நிலைமையில் இருக்கின்றது.

இன்று அரசாங்கத்தோடு இருக்கின்றவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினகள் தொடர்பில் எவ்விடத்திலும் கருத்துத் தெரிவிப்பதில்லை என்பது மிகவும் கலைக்குரிய விடயம். இன்று எரிபொருள் அதிகரிப்பு என்ற ரீதியில் பாமர மக்கள், மீனவர்கள் அதிகம் பாவிக்கும் மண்ணெண்ணெய்யின் விலை அதிகரித்திருக்கின்றது. இதைப் பற்றி யாரும் கலைப்படுவதாக இல்லை.

அதே போல் ரிசாட் பதியுதீன் விட்டில் தீக்காயங்களுக்காகி மரணித்த சிறுமி தொடர்பான விடயத்தில் அச்சிறுமிக்கு நீதி கிடைக்கப்பட வேண்டும். அதன் உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்று வடக்கு கிழக்கிலே முதலாவதாகக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நானே. இதில் எவ்வித பாராபட்சமும் பாராது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று பொலிஸிற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சருக்கும் கடிதம் அனுப்பியிருந்தேன்.

சிறுமியின் துஸ்பிரயோகம் என்பது ரிசாட் அவர்களின் வீட்டில் இடம்பெற்றாலும், என்னுடைய வீட்டில் இடம்பெற்றாலும், இன்னொருவரடைய வீட்டில் இடம்பெற்றாலும் அதற்கான நியாயம் நிச்சயமாகக் கேட்கப்பட வேண்டும். அதுபோலவே நாங்களும் இதற்கான நியாயத்தினையும் கேட்டிருக்கின்றோம்.

ஆனால் இன்று இந்த விடயத்தை வைத்து ஒருசிலர் அரசியல் செய்வதற்கு முயற்சி செய்வதென்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இது தொடர்பில் ஆளுங்கட்சியில் இருப்பவர்களும், அமைச்சர்களும் வீதியில் இறங்கி நியாயம் வேண்டும் என்று கேட்பதை எவ்வாறு சொல்வதென்று தெரியாமல் இருக்கின்றது. அமைச்சர்கள் அமைச்சரவையிலே இதனைப் பற்றிப் பேசாமல் சுதந்திர சதுக்கத்தில் நீதி கோரிய போராட்டம் செய்வதென்பது முழுமையான ஒரு அரசியற் செயற்திட்டமாகவே பார்க்க முடிகின்றது.

இது தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் உள்ள பிரச்சினை அல்ல. உண்மையிலயே ஒரு சிறுமியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், இது இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருப்பதற்கு சிறுவர் பாதுகாப்பு போன்ற பிரிவுகளை நாங்கள் பலப்படுத்த வேண்டும். சிறுவர்களை வேலைக்கு வைப்பது தொடர்பான சட்டங்களில் மாற்றம் வேண்டும். இவற்றின் மூலமாக அந்தச் சிறுமிக்குரிய நியாயத்தினைக் கோர வேண்டும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. யார் செய்திருந்தாலும் தவறு தவறுதான்.

ஆனால் இதனை இரு சமூகங்களுக்குமிடையிலான குழப்பமாக மாற்றுவதற்கு முயற்சியெடுப்பது ஒரு தவறான விடயம்.

நான் ஆரம்பத்தில் சொன்னது போல் எரிவாயு விலை அதிகரித்தமை தொடர்பில் அரசாங்கத்தோடு இருப்பவர்கள் இதுவரை ஒரு வசனம் கூடத் தெரிவித்தாக நான் அறியவில்லை. ஆனால் இரண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நடக்கும் போது மாத்திரம் ஆர்ப்பாட்டங்கள் செய்வதென்பது வேடிக்கையானதே.

நேற்று ஒரு குறிப்பிட்ட கட்சியினர் இவ்விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் சிறுமிக்காக நியாயம் கோரி ஆர்ப்பாட்டம் செய்யததாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். எமது மாவட்டத்தில் இடம்பெற்ற மேலும் பல துஸ்பிரயோகப் படுகொலைகளும் நியாயம் கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் நானும் அதில் கலந்து கொள்கின்றேன்.

இந்த விடயங்களுக்கும் சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்வோம். 2008.09.17ம் திகதி வதா எனப்படும் பொறியியலாளரின் மனைவி ஆறுமாத குழந்தையின் தாய் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 200.09.18ம் திகதி மண்டூரில் ஒரு பெண் அரச உத்தியோகத்தருக்கு என்ன நடந்தது என்று மட்டக்களப்பு மக்களுக்குத் தெரியும். 2006.01.29ம் திகதி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிள்ளைகள் வெலிகந்தையில் கொல்லப்பட்டிருந்தனர். பிறேமினிக்கு என்ன நடந்தது என்பதையும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் நீதி கேட்க வேண்டும். 2009.05.28 தினோசிக்கா கோட்டமுனையில் 03ம் ஆண்டு படித்த சிறுமி என்று இந்தப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டு செல்லும். இவ்வாறான பெண்கள், சிறுமியர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து நீதியினைக் கேட்பதற்கு முன்வாருங்கள் சேர்ந்து நீதியைக் கேட்கலாம்.

அத்துடன், அண்மையில் கௌரவ இராஜாங்க அமைச்சரின் பாதுகாவலரால் அவரது வீட்டுக் முன்பாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பதும் இதுவரை தெரியாது. அதற்கும் நீதி கோர வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஊடகங்களும் கவனம் செலுத்த வேண்டும். நான் சொல்லுகின்ற விடயங்கள் ஊடகங்களில் வருகின்ற போது வேறு விதமாகப் பிரசுரிக்கப்படுகின்றது. ஊடகங்களுக்கு நாங்கள் சொல்ல முடியாது இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று. ஊடகத்திற்கான சுதந்திரம் எப்போதும் இருக்க வேண்டும். நாங்களும் ஜனாதிபதியைப் போன்று ஊடகங்களை அடக்குவதற்காகக் சொல்லவில்லை.

அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தொடர்பில் நான் பேசும் போது கூறியிருந்தேன். கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதினால் இஸ்லாமிய மக்களுக்கு எந்தப் பாதிப்பு இல்லை. இதில் இஸ்லாமிய மக்கள் இழக்கப் போவது ஒன்றுமில்லை என்பதைத் தான் சொல்லியிருந்தேன். ஆனால் அதனை ஊடகங்களில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் ஒன்றுமேயில்லை என்று நான் சொன்னதாகத் தலைப்பிட்டு செய்தி வந்தது. இங்கு தலைப்பை மாத்திரம் பார்த்து செய்திகளைத் தீர்மானிக்கும் நபர்கள் அதிகம் உண்டு. எனவே ஊடகங்களின் தலைப்புகள் உள் விடயங்களைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும்.

எனவே ரிசாட் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட இந்தச் சிறுமியின் மரணம் தொடர்பான விடயத்திலும் நான் சொன்ன விடயங்களை தெளிவாகக் காட்டுங்கள் என்பதை ஊடகங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதனை விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். ஆனால் இதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்பது தான் என்னுடைய கருத்து.

மிருசுவில் படுகொலையில் சிறுமியைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்காவை பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுவித்த போது இன்றைய இந்த சிறு சிறு ஆர்ப்பாட்டங்களைச் செய்து இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் இந்த ஒட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எங்கே இருந்தார்கள்? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்