அப்பாவிச் சிறுமி ஹிஷாலினியின் மரணம் மன ரணமாய் வலிக்கிறது. ஞா.ஸ்ரீநேசன்.

 துறையூர் சஞ்சயன் )
மலையகத்து டயகமச்சிறுமி ஹிஷாலினியின் மரணம் மனித நேயர்கள் மத்தியில் மன ரணமாய் வலியை ஏற்படுத்தியுள்ளது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் றிஸாத் பதியுதீன் வீட்டில் 7 மாதங்களுக்கு முன்பாகப் பெற்றோரின் சம்மதத்துடன் தரகர் மூலமாக இச்சிறுமி உறுப்பினரின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார். இவர் 16 வயது நிரம்பாத சிறுமி என அறியப்படுகிறது. இவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணித்துள்ளார். இவர் தற்கொலையானாரா? கொலைக்குள்ளானரா? என்பது அறியப்படாத உண்மையாகவுள்ளது.

ஆனால் 18 வயது நிரம்பாத சிறுமியை வீட்டுப்பணிக்கு அமர்த்தியமை சிறுவர் ஊழியம் மற்றும் சிறுவர் உரிமை என்றடிப்படையிலும் குற்றமாகும். மேலும் பெற்றோர் வறுமைக்கடனில் இருந்து மீள்வதற்காக மகளைப் பணிக்கு அனுப்பியதாகக் கூறுகின்றார்கள். இப்படியான நடைமுறை மலையகத்தில் மட்டுமல்லாமல் வடக்குக் கிழக்கிலுள்ள ஏழ்மைக் குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. இப்படியாக வெளிச்சத்திற்கு ஹிஷாலினி போன்ற ஒரு சில மரணங்களே அரங்கேறுகின்றன.

எத்தனையோ ஹிஷாலினிகள் இன்றும் வீடுகள், விடுதிகள், தொழில் நிலையங்களில் என வறுமைப்பசியின் காரணமாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஹிஷாலினியின் மரணம் கொடூரமானதாக இருப்பதால் மனிதமுள்ள பலரது மனச்சாட்சிகளைத் தட்டியுள்ள அதேவேளை, மனச்சாட்சியற்றவர்கள் ரிஸாட் பதியூதீன் மீதான அரசியல் பகையினால் இதனைக் கையில் எடுத்துள்ளனர்.

மரணித்தவர் எந்த இனமானவர், எந்த மதமானவர் என்பதல்ல பிரச்சினை. சிங்களவரா தமிழரா இஸ்லாமியரா பறங்கியரா இல்லை வேறினத்தவரா என்பதல்ல பிரச்சினை. ஒர் அப்பாவிச்சிறுமி, குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்கப் போராடி உயிரைப் பறிகொடுத்துள்ளார். என்பதுதான் பிரச்சினை. இந்தச் செயலை முஸ்தாபாவோ முத்தையாவோ முத்து பண்டாவோ யார் செய்தாலும் குற்றமேயாகும். இதனை அரசியல் சமூக இன முரண்பாட்டுக்காக பயன்படுத்தி எவரும் இலாபம் தேட முனையக் கூடாது. மனித நேயப் பிரச்சினையாகவே கையாளப்பட வேண்டும்.

நம்பகமான தகவலொன்றின் படி நமது நாட்டில் 45, 000 சிறுவர்கள் ஊழியர்களாக்கப்பட்டு, சிறார்களிடமிருந்து ஊழியம் பறிக்கப்படுகிறது. 13,000 சிறுவர்கள் பெற்றோர், பாதுகாவலர் அற்ற நிலையில் காப்பகச் சிறுவர்களாகவுள்ளனர்.


73 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்த ஆளும் வர்க்கத்தினர் தம்மை வளர்த்துக் கொண்டார்கள். நாட்டையும் மக்களையும் வளர்க்கவில்லை. இவர்கள் ஏற்படுத்தியதெல்லாம் இன முரண்பாடு, இனப்பகை, உள்நாட்டுயுத்தம், வறுமை, தொழில் வாய்ப்பின்மை, விதவைக்கலாசாரம், பாதுகாவலர் அற்ற ஏதிலிகள், மக்கள் மீதான வரிச்சுனம, கடன் சுமை, தோட்டத் தொழிலாளர்கள் மீதான அடிமைத்துவம், சமத்துவ சம வாய்ப்பின்மை என்பனவாகும். இவற்றின் பிரதிபலிப்புகளால் வறுமையும் அதனால் ஏற்படும் சிறுவர் ஊழியம், சிறுவர் உரிமை மீறல்கள் போன்றவையாகும்.

இன்று இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் தலா ரூபாய் ஏழரை இலட்சம் கடன் பொறியில் வாழ்கின்றனர். இந்த 7.5 இலட்சத்தினை 220 இலட்சங்களால் பெருக்கும் போது நாட்டின் கடன் சுமை என்ன என்பதை நாமறியலாம். இந்தக் கடன் சுமை வரிகள் மூலமாக மக்களின் தலைகளில் சுமத்தப்படுகின்றன.

இப்படியான கடன் சுமைகளால் பல சிறுவர்கள் கல்விக்கு முழுக்குப் போட்டு சிறுவர் ஊழியர்களாக மாறுகின்றனர். எது எப்படியாக இருந்தாலும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக உண்மையான  குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் சூழ்ச்சிகள் அரசியல் பழிவாங்கல்கள் இருக்கக் கூடாது. ஏப்ரல் குண்டுத்தாக்குதலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மர்மங்கள் மறைப்புகள் இடம் பெறக்கூடாது எனவும் மேலும் கூறினார்.