அம்பாறை மாவட்டத்தில் பலத்த காற்றுடனான மழை தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து வீழ்ந்தது

(எம்.ஏ.றமீஸ்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று(26) பிற்பகல் வேளை பலத்த காற்றுடனான மழை பெய்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பலத்த காற்று வீசியதனால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்பு கோபுரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திற்கு அண்மையில் அமையப் பெற்ற இத்தொலைத் தொடர்பு கோபுரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து வீழ்ந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தொலைத் தொடர்பு கோபுரம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி மக்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமையப் பெற்றதாகும். இக்கோபுரம் முறிந்து வீழ்ந்தமையால் சில வீடுகளுக்கு பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இக்கோபுரம் வீழ்ந்தமையால், மக்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் உடமைகள் சிலவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வீடுகளில் வீற்றிருந்த பொதுமக்கள் சிறுவர்கள், வயோதிபர்கள் போன்றோர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் போன்றவற்றுக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, இப்பிரதேசத்தில் சில மணி நேரம் மின்துண்டிப்பும் இடம்பெற்றிருந்தன.
அம்பாறை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வேளையில், வீசிய சுழல் காற்றின் காரணமாக சில பிரதேசங்களில் இருந்த சிறு மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், கடற்கரைப் பகுதியினை அண்டிய பிரதேசங்களில் பலத்த காற்று வீசியதனால் கடற்றொழிலுக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று பொலிஸார் விரைந்து சென்று மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.