அரசாங்கம் சீர்செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்

நாடளாவிய ரீதியில் பல நாட்களாக அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பிரதானமாக மூன்று விடயங்களை முன்வைத்து போராட்டம் ஒன்றினை நடாத்துகின்றோம்.
1. ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு.
2. Online கற்பித்தலுக்காக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போதிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி கொடுத்தல்.
3. கொத்தலாவல சட்டமூலத்தை மீளப் பெறல்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து ஆசிரியர்களும் நிகழ்நிலை கற்பித்தலில் இருந்து விலகியுள்ளோம். ஆகவே இந்த விடயங்களை தற்போதுள்ள அரசாங்கம் சீர்செய்யும் வரை எங்களது இந்த போராட்டமானது நாடு முழுவது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
இது ஒரு தனி மனித போராட்டம் அல்ல ஆகவே கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல ஆசிரியர்களும் ஒன்றுபட்டு இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றனர். குறிப்பாக 5 கல்வி வலயங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் ஒருபோதும் மாணவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைகள் தீர்க்கப் படாமல் ஒவ்வொரு அரசாங்கமும் மாறி மாறி இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றனர்.
அதேபோல் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற சாதாரண குடும்பங்களில் நிகழ்நிலை கற்ப்பித்தலுக்கு எந்தவித அடிப்படை வசதியுமின்றி காணப்படுகின்றனர். COVID-19 காரணமாக சுமார் ஒன்றரை வருடமாக மாணவர்கள் பாரிய சிரமத்தை எதிர்கொள்கின்றார்கள். இதற்காக தற்போதைய அரசாங்கம் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
கல்வி நடவடிக்கைகளை தனியார்மயப்படுத்தல், இராணுவமயப்படுத்தல் உள்ளடக்கிய கொத்தலாவல சட்ட மூலத்தை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும். போன்ற விடயங்களை சீர் செய்யும் வரை எமது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இதற்காக தற்போது வழங்குகின்ற ஆதரவினைப் போன்று அனைத்து ஆசிரியர்களும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை ஒற்றுமையோடு வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

திரு.த.கோகுலறமணன்
செயலாளர் (மட்;மேற்கு கல்வி வலயம்),
மத்திய குழு உறுப்பினர் – மட்டக்களப்பு மாவட்டம்,
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்.