தனியொருவராக யாழில் இருந்து கதிர்காமத்திற்கு யாத்திரையினை மேற்கொண்ட சங்கரன் அடியார்

வி.சுகிர்தகுமார்

  கொரோனா நிலை காரணமாக கதிர்காம பாதயாத்திரை இவ்வருடம் தடைப்பட்டபோதிலும் அதன் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் தனியொருவராக யாழில் இருந்து புறப்பட்டு யாத்திரையினை மேற்கொண்டு நிறைவு செய்தார் சங்கரன் அடியார் அவர்கள்.
அவர் இன்று இடம்பெற்ற கதிர்காம கந்தனின் தீர்த்தோற்சவத்திலும் கலந்து கொண்டார்.
யாழ் செல்லசந்நிதி ஆசிரமத்தின் தலைவர் கலாநிதி செந்நி மோகனதாஸ் சுவாமியின் ஆசிர்வாதத்துடன் யாழ் வேல் யாத்திரை குழுவின் சார்பாக கடந்த கடந்த 06ஆம் திகதி யாழி;ல் இருந்து பாதயாத்திரையினை ஆரம்பித்த சங்கரன் அடியார் உகந்தை ஆலயத்தை கடந்த வாரம் அடைந்தார்.
காட்டுவழிப்பாதை தடைப்பட்டதன் காரணமாக அங்கிருந்து லாகுகல புத்தள பிரதான வீதிகளினூடாக கதிர்காமத்தை 20ஆம் திகதி சென்றடைந்தார்.
இந்நிலையில் பாதயாத்திரையினை தனியொருவராக மேற்கொண்ட அவருக்கு இந்து பௌத்த அடியார்கள் கிராமங்கள் தோறும் உபசரிப்பினை வழங்கி வழி அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வாறு கதிர்காமத்தை சென்றடைந்த அவர் பூஜை வழிபாடுகள் மற்றும் பெரகராவிலும் கலந்து கொண்டு இன்று இடம்பெற்ற கதிர்காம கந்தனின் தீர்த்தோற்சவத்திலும் பங்கேற்றார்.
நமது பாரம்பரியத்தை காக்க வேண்டும் எனும் நோக்கிலேயே முருகப்பெருமானின் அருளோடு தனியொருவராக பாதயாத்திரையினை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.