இறைவன் நாடினால் இன்னும் பத்து வருடத்திற்கு ராஜபக்ஷ ஆட்சிதான்.மௌலவி முபாரக் அப்துல் மஜீத்

????????????????????????????????????

ந.குகதர்சன்

எதிர்கட்சி ஒரு பலம் இழந்த கட்சியாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த கட்சியை நம்பிக் கொண்டிருக்க முடியாது. எங்களது சமூகத்திற்கு பல பிரச்சனைகள் இருக்கின்றது. எங்களது பிரச்சனைகளை அரசாங்கத்தோடு இணைந்து தான் வெல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கு நிமயனக் கடிதம் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிர்கட்சியினர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். இன்றைய சூழலில் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான எதிர்கட்சியினரால் எதுவுவே செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கின்றது. அந்த சூழ்நிலையில் நாங்கள் சரியாக இயங்குகின்றோம் என்பதை காட்டி தங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்காகவும், ஆசுவாசப்படுத்துவதற்காகவும், என்னன்னமோ செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அமைச்சர் உதயன் கம்மன்பிலவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தார்கள். இதனை அப்போதே நாங்கள் சொன்னோம் முட்டாள்தனமான நடவடிக்கை என்று. அரசுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை தீர்த்து அரசை இன்னும் பலப்படுத்துவதாகதான் இருக்கும் என்று சொன்னோம். அதேபோன்று தான் நடந்திருக்கின்றது.

எதிர்கட்சியினர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இறைவன் நாடினால் இன்னும் பத்து வருடத்திற்கு ராஜபக்ஷ ஆட்சிதான் இருந்து கொண்டிருக்கும். ஆளும் கட்சிக்குள் சில அதிருப்திகள் இருக்கலாம். ஆனால் இவர்கள் மகிந்த ராஜபக்ஷ மீது அதிருப்திப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அணி தொடர்ந்து இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது.

எதிர்கட்சி ஒரு பலம் இழந்த கட்சியாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த கட்சியை நம்பிக் கொண்டிருக்க முடியாது. எங்களது சமூகத்திற்கு பல பிரச்சனைகள் இருக்கின்றது. எங்களது பிரச்சனைகளை அரசாங்கத்தோடு இணைந்து தான் வெல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் கட்சிகள் எங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என்று மக்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திட்டமிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் ஆசுவாசப்படுத்தி எதை கண்டார்கள். அவர்கள் தான் அனுபவித்தார்கள் சமூகம் எதனையும் அனுபவிக்கவில்லை.

தங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என்று தங்களது ஆதரவாளர்களை ஏமாற்றுவார்கள். எங்களுக்கு தெரியும் அமைச்சு பதவி கிடைத்தாலும் எதுவும் செய்யமாட்டார்கள். அமைச்சு பதவி கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் இன்று இல்லை. எங்களது கட்சியை பலப்படுத்துவதன் ஊடாக நாங்கள் அரசாங்கத்தில் இருந்து எங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய தீர்வுகளையும், எங்களுக்கான அபிவிருத்திகளையும் பெறலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளினால் எமது சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் நேர்மையாக செயற்படுகின்றோம். எங்களால் எது முடியுமோ அதை முடியும் என்று சொல்லுவோம். நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பாரிய வெற்றிகளை காண முடியும். சிறந்த கட்சியாக, இனவாதமில்லாத ஆட்சியாளர்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், அதன் தலைவர்களும் திகழ்கின்றார்கள். இதனை நாம் பயன்படுத்த வேண்டும்.

நேர்மையாக நாங்கள் அரசியலில் செயற்பட்டோம் என்று சொன்னால் இறைவன் நமக்கு நல்ல பாக்கியத்தினை தருவான். நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம். எனவே எமது கட்சிக்கு மக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கல்குடா பிரதேச இணைப்பாளர் எம்.ஐ.சல்மான் வஹாப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் ஸாஹித் முபாரக், கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள், இளைஞர் அணி தலைவர்கள், பிரதேச அமைப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட, பிரதேச இணைப்பாளர்கள் ஆகியோருக்கு நிமயனக் கடிதங்கள் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

????????????????????????????????????