மட்டக்களப்பில் அரசியல் ரீதியாக வாக்கு வங்கியில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சந்திரகாந்தன் பா.உ

( துறையூர் சஞ்சயன் ,ரக்ஸனா )

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலின்போது மட்டக்களப்பில் அரசியல் ரீதியாகவாக்கு வங்கியில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பட்டிருப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்கும் நிகழ்வு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று (17 ) மாலை இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். அத்தோடு நாட்டை ஆட்சி செய்கின்ற பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வியாழேந்திரனும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
ஆக கிட்டத்தட்ட கிழக்கிலே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுடைய வாக்குகள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கிடைத்திருக்கின்றது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை கோட்டாபய அரசுக்கு பெற்றுத்தந்த கிழக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து அபிவிருத்தி அடைந்த மாவட்டங்களாக வளர்த்தெடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதைவிட கிழக்கில் அதிகூடிய தமிழர்கள் வாழ்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு இருப்பதனால் விரும்பியோ விரும்பாமலோ மாகாணத்துக்கான தலைமைத்துவத்தையும் மாகாண நிர்வாக விடயங்களையும் பலமாகப் பார்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது.

அந்த அடிப்படையில், இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கு அயராத முயற்சி எடுக்க வேண்டிய தேவையுள்ளது. அதே போன்று பொறுப்புமிக்க அரசாங்கம் பெரும்பான்மை பலத்தோடு இயங்கினாலும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகளில் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டிய பொறுப்பு சந்திரகாந்தன் ஆகிய எனக்கும் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் இருக்கிறது. எதிர்காலத்திலும் பலமான கட்டமைப்பை உருவாக்குவதற்கு நாம் இருவரும் மாவட்டத்தின் சார்பாக பாடுபடுவோம்.

ஏற்கனவே ஏனைய மாகாணங்களோடு ஒப்பீடுகின்றபோது கிழக்கின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதனால் எழுச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் நிவர்த்திக்க வலயமும் பாடசாலை அதிபர்களும் மாணவர்களும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. நலிவடைந்த பாடசாலையின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு எல்லோரும் பாடுபட வேண்டியுள்ளது.

டெப் கணினிகள், இணைய வசதிகள், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல் என்பவற்றை எல்லைப்புற கிராம பாடசாலைகள் எதிர்வரும் காலங்களில் பெறும் என்பதை நம்புகிறேன். அதே போன்று மாகாண மட்டப் பாடசாலைகளை அடுத்த ஆண்டிலே தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு பாடுபடுவோம்.

அரச நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களை கிழக்குப் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமித்துள்ளோம். அவ்வாறான பட்டதாரிப் பயிலுனர்களை  பாடத்திற்கேற்றாற்போல் நிரந்தர ஆசிரியர்களாக ஆக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். அந்த அடிப்படையில் நாங்கள் எல்லோரும் கல்வியை கட்டியெழுப்புவதற்கு உறுதியான நிலையுடன் பாடுபட வேண்டும். அதனோடு ஒட்டியதாக பொருளாதார ரீதியாகவும் அரசாங்கத்தினை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 375000 தடுப்பூசிகள் தேவை தற்போது கிட்டத்தட்ட ஒரு 100000 தடுப்பூசிகள் வந்துள்ளன. அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என நம்புகின்றேன். அதன்பின்னர் பாடசாலைகள்இ சுற்றுலா தலங்கள் இயங்கி பொருளாதாரம் மேம்படும் என நம்பகின்றோம். 2022 ஆம் ஆண்டு ஒரு சுறு சுறுப்பான பொருளாதார வளர்ச்சிமிக்க ஆண்டாக மலரும்.

மட்டக்களப்பு மாவட்டம் இம்முறை அரசியல் ரீதியான ஒரு பெரும் மாற்றத்தைச் செய்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து நானும் பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். இது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகும். இம்மாவட்டத்தை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதுபோல் கிழக்கு மாகாணத்தின் அதிகூடிய தமிழர்கள் வாழ்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதால் விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் மாகாணத்திற்கான தலைமைப் பொறுப்பையும் நிருவாகத்தையும் பொறுப்பேற்கும் பொறுப்பையும் மக்கள் எங்கள் இருவருக்கும் சுமத்தியிருக்கின்றார்கள்.

கல்வியியலாளர்களும், பெரியோர்களும் தொடர்ந்தும் முயற்சிகளை எடுக்கவேண்டும். கொவிட் தொற்று காரணமாக நலிவடைந்துள்ள கல்வித்தரத்தை கட்டியெழுப்பு முயற்சியெடுக்க வேண்டும். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது கல்வியில் வீழ்ச்சியிலுள்ளது.என்றார்.