அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் அம்பாறை விஜயம்.

(எம்.ஏ.றமீஸ்) கைத்தொழில் துறை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று(15) உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள இத்தொழிற்சாலைக்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச இத்தொழிற்சாலையின் நடவடிக்கைகளைப் பார்வையிட்டதுடன் இத்தொழிற்சாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இதேவேளை, இத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மிகுந்த அக்கறையுடன் சேவையாற்றும் விடயம் தொடர்பில் பாராட்டியதுடன், இத்தொழிற்சாலையின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தினார்.
இப்பிரதேசத்தினை அண்டிய தீகவாபி ரஜமகா விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின் மிக உயரமான தாது கோபுர நிர்மாணத்திற்கான மூலப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்றவற்றை இத்தொழிற்சாலை மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, தீகவாபி தூபி அமைப்பது சம்பந்தமான உதவிகளை இத்தொழிற்சாலையின் உதவிகளுக்கு மேலாக எம்பிலிப்பிட்டிய ஓட்டுத் தொழிற்சாலை மூலமாகவும் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தீகவாபி தாதுகோபுர நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த வருடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குள் நிர்மாணப் பணியினை நிவர்த்தி செய்யும் வகையில் இத்தூபி தற்போது துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 270 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இத்தாது கோபுரத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், சிவில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த ஆர்வத்துடன் தமது உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும், இக்கட்டுமானப் பணிகளுக்கான நன்கொடைகளை பௌத்த சமயத்தினர், நன்கொடையாளர்கள் போன்றோர் வழங்கி வருவதாகவும் இதன்போது கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது அமைச்சின் உயரதிகாரிகள், முப்படையதினைச் சேர்ந்த உயரதிகாரிகள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.