தடுப்பூசி போடாமல் காப்பட் வீதி அமைப்பதன் நோக்கம் என்ன?

தமிழர்களை இணைக்காத அபிவிருத்தியை கட்டாயம் எதிர்ப்போம்!
ஊடகமாநாட்டில் கல்முனை விகாராதிபதி ,மா.ச.உறுப்பினர் காட்டம்.
( வி.ரி.சகாதேவராஜா)

இன்றைய காலகட்டத்தில் கல்முனைப்பிராந்திய மக்களுக்குத் தேவையான தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்காமல்  எந்தவித குடியிருப்புகளுமற்ற நன்செய் நிலத்தில் அவசரமாக  மாவடிப்பள்ளி – கல்முனை வீதி செப்பனிடப்படுவதன் நோக்கம் என்ன?இது விடயத்தில் எமது மக்களுக்கு நியாயமான சந்தேகமுள்ளது. ஜனாதிபதி இவ்வீதியமைப்பை உடனடியாகத் தடைசெய்யவேண்டும்.

இவ்வாறு கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் நேற்று(13) நண்பகல் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் தெரிவித்தார்.

காரைதீவுக்குட்பட்ட சர்ச்சைக்குரிய  மாவடிப்பள்ளி முதல் கல்முனை வரையிலான காப்பட் வீதி புனரமைப்பு அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் மத்தியில் பலத்த  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன் ஓரங்கமாக கல்முனை தமிழர்களும் கொதிப்படைந்துள்ளனர். அதுதொடர்பாக கல்முனை சுபத்ராராமய விகாரையில் விகாராதிபதி வண.சங்கரத்ன தேரர் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தியிருந்தனர்.

அங்கு வண.சங்கரத்ன தேரர் மேலும் கூறுகையில்:
காரைதீவு தமிழ்க்கிராமத்தின் இருப்பை  கபளீகரம் செய்யும் நோக்கில் மாவடிப்பள்ளி – கல்முனை வயலோர கார்ப்பட்வீதியமைப்பதை நாம் முற்றாக எதிர்க்கிறோம்.
குறித்த வீதி கடந்தவருடம் ஜனவரி மாதம் கல்முனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டபோது நாம் எதிர்த்தோம். அதனால் கைவிடப்பட்டது. இன்று அதனை காரைதீவிலிருந்து ஆரம்பிக்கிறார்கள்.

இவ்வாறு காரைதீவு எல்லைக்குள் போடப்படும் இவ்வீதி அமைப்புடன் சம்பந்தப்பட்ட யாரிடமும் அனுமதி பெறாமல் இவ்வீதி ரகசியமாக சட்டவிரோதமாக போடப்படுவதன் நோக்கம் என்ன? இவ்வீதி புனரமைப்பினால் விவசாயம் மீன்பிடி ம்களின் வாழ்வாதாரம் அனைத்தும் பாரிய பாதிப்புக்குள்ளாகும்.

எனவே நாட்டின் தலைவர் என்ற வகையில் ஓர் இனத்தை கபளீகரம் செய்யும் நோக்குடன் அமைக்கும் இவ்வீதியை உடனடியாக நிறுத்துமாறு இப்பிரதேச ஒரேயொரு பௌத்தமதகுரு என்ற வகையில் பணிவாக வேண்டுகோள்விடுக்கின்றேன்.என்றார்.

உறுப்பினர் ராஜன் காட்டம்!
த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:
நாம் அபிவிருத்திக்கு எதிரானவர்களல்ல. தமிழர் பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தியின்போது தமிழர்களை இணைத்து முன்னெடுத்தால் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க தயாராகவிருக்கிறோம்.

அண்மையில் மையோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா மருதமுனை தொடக்கம் நிந்தவூர் வரை கடலோர வீதியை காப்பட் வீதியாக்க முற்பட்டபோது அவர் எவ்வித புறக்கணிப்போ பாரபட்சமோ இல்லாமல் தமிழ்ப்பிரதேசங்களையும் இணைத்து அந்த பிரதேச தவிசாளர் உறுப்பினர்களை இணைத்து கலந்துரையாடி அதனை முன்னெடுத்திருந்தார். அதனைத்தான் எதிர்பார்க்கிறோம்.இப்படிப்பட்ட முஸ்லிம் தலைவர்களையோ எமது தமிழ்மக்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் எமது பகுதியில் நடைபெறும் அபிவிருத்தி எம்மிடம் கேளாமல் சிலவிஷமிகள் ரகசியமாக முன்னெடுப்பதை அனுமதிக்கமுடியாது. உதாரணமாக கல்முனை நகர அபிவிருத்தித்திட்டத்தை குறிப்பிடலாம். தமிழர் பிரதிநிதிகளை உள்ளடக்காமல் கலந்துரையாடாமல் முன்னெடுக்கப்படவிரந்த அத்திட்டத்தை நாம் எதிர்த்தோம்.

அதுபோல இன்று காரைதீவிலிருந்து விவசாய வீதியை காப்பட் வீதியாக்க முனைந்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக அங்குள்ள பிரதேசசெயலாளரையோ தவிசாளரையோ நீர்ப்பாசன மற்றும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை தலைமை பொறியியலாளரையோ கலந்தாலோசிக்காமல் முன்னெடுக்கப்படுவதுதான் பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இது தமிழ்மக்களின் வாழ்வுரிமையை குழிதோண்டிப் புதைக்கும் செயற்றிட்டமாகும்.இதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.அம்பாறை மாவட்டத்தில் எமது தமிழ்மக்கள் எங்கிருந்தாலும் பாதிக்கப்படுவதை நாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக உண்ணாவிரதத்தில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது காரைதீவில் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அவர்களும் எமக்காதரவாக முச்சந்தியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று அவர்களது பிரதேசத்திற்கு அச்சுறுத்தல் பாதிப்பு வரும்போது நாம் சும்மா வாழாவிருக்கமுடியாது.

எனது அன்புக்குரிய சாய்ந்தமருது உறுப்பினர்கள் என்னிடம் இதற்க ஒத்துழைக்குமாறு கேட்டார்கள்.முஸ்லிம் மக்களது அபிவிருத்தியை நாம் ஒருபோதும் தடுக்கமாட்டோம். ஆனால் எமது தமிழ்மக்களுக்கு ஒரு பாதிப்பு வரும்போது நாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கமுடியாது என்றேன்.-

உடனடியாக இவ்வினவாத சிந்தனையுடனான இவ்வீதி புனரமைப்பை  ஜனாதிபதி தடைசெய்யவேண்டும் என்றார்.