ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் செயல்பாடுகளில் மறு அறிவித்தல் வரை ஈடுபட வேண்டாம்

கதிரவன்

ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் செயல்பாடுகளில் மறு அறிவித்தல் வரை ஈடுபட வேண்டாம் என்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பப் பத்திரங்களை இணையவழி ஊடாக மேற்கொள்வதை நிறுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆசிரியர்களையும் அதிபர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

திருகோணமலை வித்தியாலயம் வீதியில்  உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை 2021.07.13 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் என் ஜெயதீபன் இக் கருத்தினை தெரிவித்தார்.

ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலமானது கல்வியை தனியார் மயப்படுத்தும் ஒரு செயல்பாடாக அமைய உள்ளது. இது எதிர்காலத்தில் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது இலவச கல்வி முறை மாற்றம் பெற்று கட்டண கல்வி முறை அறிமுகம் பெறுவதற்கான வாய்ப்பாகவும் இது அமைய உள்ளது.

அது போன்று இன்றைய சூழலில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான மன உளைச்சலுக்கு உட்பட்டு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அரசாங்கம் ஆசிரியருக்கு எந்தவிதமான கற்பித்தல் சாதனங்களையும் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மாணவர்களுக்கும் இணையவழி ஊடாக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. சில குடும்பங்களில் மூன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் கற்றலுக்கான இணைய வசதியுடன் கூடிய ஒரு உபகரணங்கள் மாத்திரமே உள்ள நிலை காணப்படுகின்றது. இதனால் ஏனைய பிள்ளைகள் உரிய கற்றல் நடவடிக்கைகள் அவர்கள் முழுமையாக ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் பிள்ளைகளுக்கு இடையிலும் மன உளைச்சல்கள் காணப்படுகின்றது.

அரசாங்கமானது தற்கால நிலையை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு கற்றலுக்கு வேண்டிய இணைய வசதியுடன் கூடிய உபகரணங்களை வழங்க வேண்டும் அல்லது தொலைக்காட்சி வானொலி மூலமான கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் 22 வீதமான மாணவர்கள் தற்போதைய இணையவழி கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வசதி குறைந்த பிள்ளைகள் இணைய வசதி குறைந்த பிள்ளைகள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகிறது.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வரை இணைய வழி ஊடான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை உடன் நிறுத்துமாறு ஆசிரியர்களை இச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தங்களால் வழங்கப்படும் மறு அறிவித்தல் வரை இத்தொழிற்சங்க போராட்டத்தில் நீங்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று வினயமாக சங்கத்தின் செயலாளர் ந.ஜெயதீபன் ஆசிரியர்களையும் அதிபர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.