இலங்கையில் கொரோனா அரசியலும் கையாளப்படுகிறதா? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன்.

( துறையூர் சஞ்சயன் ) பொதுமக்கள் தமது திண்டாட்டங்களை ஜனநாயக அடிப்படையில் வெளிப்படுத்த முடியாமல் திக்குமுக்காடுகின்றனர் என கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இலங்கையில் ஜனநாயக மனித சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதா என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் கொரோனா வைரஸ் சில விசித்திர செயல்களையும் செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில், திண்டாட்டங்களை வெளிக்காட்டுவதற்காக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி தெருக்களுக்கு வருகின்றார்கள்.

மீனவர்கள் விவசாயிகள் பாதிப்பு, எரிபொருள், விலைவாசி ஏற்றம், கொத்தலாவலத் தேசிய பாதுகாப்புக் கல்லூரி தொடர்பான சட்டமூலம், அரசியல் நோக்கம் கருதிய கைதுகள், எதிர்க்கட்சி ஒடுக்கப்படுதல், மனித உரிமைகள் மீறப்படுதல் போன்ற அரசின் அண்மைக்கால
செயற்பாடுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்போது தமது திண்டாட்டங்களை வீதிகளில் இறங்கி நாட்டிற்கும், உலகத்திற்கும் அம்பலப்படுத்த விரும்புகின்றனர். இதன்போது அரசு அதற்கான முறையான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் அடக்கி ஒடுக்கிவிட நினைக்கிறது. இதற்காக கொரோனாத் தொற்று, பொலிஸ், நீதிமன்றத் தடையுத்தரவுகள் என்ற உத்திகளைப் பயன்படுத்திக் கைது செய்கின்றனர். நீதிமன்றங்களில் நிறுத்துகின்றனர்.
தனிமைப்படுத்துகின்றனர்.

பாதிக்கப்படுகின்ற திண்டாடும் மக்கள் கூடினால் கொரோனா தாக்கும், தொற்றும் என்ற அடிப்படையில் அரசதரப்பினர், பொலிஸார், படையினர் வியாக்கியானம் அளிக்கின்றனர். அதே வேளை அரசுக்கு ஆதரவான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றின் போது பொலிஸார் கண்டும் காணாமல் செயற்படுகின்றனர்.

அந்த வேளையில் கொரோனாத் தொற்று ஏற்படாது என்ற வகையில் அரசின் செயற்பாடுகள் அமைகின்றன. அவ்வாறாயின், இலங்கையிலுள்ள கொரோனா அரசுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிக்கும் மக்களுக்கும் எதிராகவுமா செயற்படுகின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

பசில், நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பொதுமக்கள் திரண்டு பட்டாசுகள் வெடிக்க வைத்துக் கொண்டாடினர். அதன்போது எவரும் கைது செய்யப்படவோ தனிமைப்படுத்தப்படவோ இல்லை. அதே நாளில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பெளத்த துறவி, வயோதிபத்தாய், பெண் போன்ற பலர் அடித்து இழுத்துச்செல்லப்பட்டனர். பெண் ஒருவரின் சட்டையும் கிழிக்கப்பட்டிருந்தது.

எனவே ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது வெறும் சொல்லாடல் மட்டுந்தான் என்பதை மக்கள் தெளிவாக விளங்கியுள்ளனர். நடைமுறையில் அக்கூற்று பொய்யாகிவிட்டது. மொத்தத்தில் கொரோனாவும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்களைத் தாக்காமல் மக்களின் திண்டாட்டங்களைத் தாக்கும் புதுவகை வைரஸ்கள் இலங்கையில் உள்ளன என்பது விசித்திரமான அரசின் கண்டுபிடிப்பாகவுள்ளது. இந்த நடைமுறை எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது என்பதுதான் இன்றைய மக்களின் கேள்வியாகும்.

இன்று இலங்கையில் கொரோனா அரசியலும் கையாளப்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொண்டாடும் மக்களைத் தாக்காமல், திண்டாடும் மன்றாடும் மக்களைத் தாக்கும் கொரோனா வைரஸ்களுக்கு அரசியல் படிப்பினை ஊட்டியவர்கள் யார் என்பதுதான் எதிர்க்கட்சிகளதும் பாதிக்கப்படும் மக்களதும் கேள்வியாகும் என்றார்.