யுத்த காலத்தை போன்று சவால்களை எதிர்கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) யுத்த காலத்தை போன்று அச்சமான சூழலுக்கு மத்தியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது என கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் ‘சௌபாக்கிய வாரம்’ வேலைத்திட்டத்தின் போது சமூர்த்தி பயனாளி ஒருவருக்கு புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு (07) நற்பிட்டிமுனையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் பிரதேச செயலாளர் உரையாற்றுகையில்இ முரண்பாடுகளுக்கு மத்தியில் அபிவிருத்தி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. எதிர்கால சந்ததிகளுக்கு தேவையான வளங்களை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் முன்னெடுக்க வேண்டும். யுத்த சூழல் காலகட்டத்தையும் பார்க்க இன்று கண்களுக்கு தெரியாத வைரசுடன் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதன் தாக்கத்திற்கு ஈடு கொடுத்து பணியாற்ற வேண்டியுள்ளது. கடந்த வாரம் எமது சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரையும் இழந்துள்ளோம். இன்னும் பல உறவுகளை இழந்துள்ளோம் தொடர்ந்தும் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற தகவல்களையும் அறிகிறோம். எனினும் அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை தொடர்ந்தும் வழங்கிவருகிறோம்

இன்னிலையில் நாட்டில் வழங்கப்பட்ட மூன்று மில்லியன் தடுப்பூசிகளுக்குள் எமது கல்முனை பிராந்திய உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்படாமல் விட்டது கவலையாக இருக்கிறது. விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் கொல்லி தொற்று நோய்கு மத்தியில் பணியாற்றும் உத்தியோகத்தர்களையும் அவர்களது தியாகங்களையும் நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.முபீன், திட்ட முகாமையாளர் திருமதி நயீமா உட்பட சமூர்த்தி திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.