கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிக பீடத்தை அமைத்தல் தொடர்பாக சந்திரகாந்தன் நடவடிக்கை.

தலவாக்கலை பி.கேதீஸ்

கிழக்கு மாகாணத்தில் இந்து சமய விவகாரங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று 6.7.2021 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவ ஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கொவிட் தொற்று காரணமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ள இந்து சமய கலாசார செயற்பாடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அவை தொடர்பாக எடுக்க வேண்டிய முக்கிய செயற்பாடுகள் பற்றியும், மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத்தில் இந்து சமய கலாசார செயற்பாடுகளை மேம்படுத்தும் பல்வேறு எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஆலயங்கள் அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி , இந்து சமய அறநெறிக் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்தி விரிவாக்குவதற்கான திட்டங்கள், இந்துக் குருமாருக்கான பயிற்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்க உத்தேசிக் கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்திற்கான பயிற்சி நிலையம் என்பன பற்றியும் கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிக பீடத்தை அமைத்தல் தொடர்பான விடயத்தை துரிதப்படுத்தும் முகமாக பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.