விசமிகளுக்கு அஞ்சி எமது வீதியோரப் போராட்டம் மௌனிக்கப்படவில்லை.பொத்துவில் நிலமீட்பு போராட்ட மக்கள் கருத்து

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
கொரோனா நோய் காரணமாக எமது வீதியோரப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர விசமிகளுக்கு அஞ்சி அல்ல

நிலத்தைமீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் பொத்துவில் 60 கட்டை ஊரணி நிலமீட்பு போராட்ட மக்கள் கருத்து

நாம் எமது பூர்வீக நிலங்களை மீட்டெடுக்கும் வரை எனது போராட்டம் தொடரும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நாம் வீதியோரம் முன்னெடுத்து வந்த நிலமீட்பு போராட்டம்
மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர விசமிகளுக்கு அஞ்சி எமது போராட்டம் கைவிடப்படவில்லை என பொத்துவில் நிலமீட்பு போராட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாரை பொத்துவில் 60கட்டை ஊரணி கிராம மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்கள் மற்றும் விவசாய காணிகளை வழங்குமாறு கோரி கடந்த 2018 ஆகஸ்ட் 14ந் திகதி முதல் பொத்துவில் ஊரணி பிரதான வீதியில் புஞ்சுமாத்தயா ரங்கத்தனாவின் தலைமையில் இவ்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இவ் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்த அம்பாரை மாவட்ட செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஒன்றினைந்து மாவட்ட செயலாளர் மேலதிக மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் மக்களுக்கான காணிகளை வழங்கி வைக்கும் நோக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து காணி கோரிக்கையாளர்களின் காணி ஆவனங்களை பரிசீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பொத்துவில் பிரதேச செயலகத்தினால் பெயர் பட்டடில் ஒன்றும் வெளியீடப்பட்டு இருந்ததோடு காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக காணிகள் கையளிப்பு தொடர்பான வேலைகள் தாமதங்கள் ஏற்பட்டு இருந்ததுடன் நிலமீட்பு போராட்டகாரர்களின் வீதியோர போராட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்டு இருப்பதுடன் சில விசமிகளால் போட்ட கொட்டகையும் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு நிலமீட்பு போராட்டத்தின் நிலைமைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 102 குடும்பங்களின் பெயர் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஏனைய குடும்பங்களின் பெயர்கள் இடம்பெறாமைக்கு காரணங்கள் புரியாது கவலை அடைந்துள்ளதாகவும் கண்ணீர்மல்ல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தனர்.