கல்முனையில் கிராமசேவையாளரைத்தாக்கிய நபர் பொலிசாரால் கைது!

 வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை 1 சி விஸ்ணுபுரம் பகுதியிலுள்ள அரசகாணியை திட்டமிட்டு சட்டவிரோதமாக மண்போட்டுநிரப்பும் நிரப்புவதை கண்ட அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் அங்குநின்றவரால் தாக்கப்பட்டதாக கல்முனைப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து குறித்த நபரை கல்முனைப்பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம்(2) கல்முனை 1சி விஸ்ணுபுரப்பகுதியிலுள்ள கடலோரப்பாதுகாப்பு வலயத்தினுள் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தையறிந்த த.தே.கூட்டமைப்பின் அவ்வட்டாரத்திற்குரிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உடனடியாகச்செயற்பட்டு சக உறுப்பினர் கே..சிவலிங்கம் சகிதம் மறுநாளான நேற்று(3) அங்கு சென்றார். மற்றுமொரு த.வி.கூட்டணி உறுப்பினரான எஸ்.சந்திரனும் சமுகமளித்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு  த.தே.கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனும் வருகைதந்தார்.

குறித்த காணி ‘அரசகாணி’ என குறிக்கும் பெயர்ப்பலகையும் உடைக்கப்பட்டு தூக்கிவீசப்பட்டிருந்தது. அங்கு வெறும்கம்பம் மட்டுமே இருந்ததை அவர்கள் கண்ணுற்றனர்.

ஸ்தலத்தில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஏனைய உறுப்பினர்களோடு கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த  சில நபர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
இது தங்களுடைய காணி உங்களுக்கென்ன இங்கு வேலை ? என்றுகூறி உறுப்பினர் ராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானது. இனமுறுகல் ஏற்படுவதற்கான ஏதுநிலை அங்கு நிலவியது.

அத்தருணம் அங்குவந்த கல்முனை முஸ்லிம் பிரதேசசெயலாளர் ஜெ.லியாக்கத்தலி தலையிட்டு இருசாராரையும் சாந்தப்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கருத்துரைக்கையில் எமது தமிழ்ப்பிரதேச காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகிறது. நேற்று அவ்வாறான சட்டவிரோத மண்நிரப்பல் இடம்பெற்றபோது கிராமசேவையாளர் வந்து தடுத்தபோது அவர் தாக்கப்பட்டுள்ளார்.இதனையறிந்து பிரதேசசெயலாளர் அதிசயராஜ் வந்தபோது அவருக்கும் தகாதவார்த்தைபேசி நீங்கள் உதவிபிரதேசசெயலாளர் உங்கள் வேலையைப்பாருங்கள் என்று கூறியுள்ளனர். இந்த அடாவடித்தனத்தை ஒருசிலர்தான் செய்கின்றனர். அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களை நாம் குற்றம்சுமத்தவில்லை.இங்கு சண்டித்தனம் காட்டமுற்பட்டால் நாமும் காட்டுவோம்.நாம் இங்குதான் பிறந்தவர்கள். என்றார்.

பேசிக்கொண்டிருந்தபோது அங்கு குழப்பம் ஏற்பட்டது.
அதன்பின்னர் இருசாராரும் கலைந்து சென்றனர். பின்பு அங்க நிரப்பப்பட்ட மண் கனரக இயந்திரம்மூலம் அகற்றப்பட்டது.
இதற்கு முன்னர் குறித்த நபரால் கடலோர பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட மேற்குறித்த இடத்தில் மண் இட்டு அபகரிக்க முற்பட்ட போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு மண் அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.