கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கம்.

(பாறுக் ஷிஹான்) அச்சுறுத்தல் காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முதல் முடக்கப்பட்டதை அடுத்து முடக்கப்பட்ட பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளும் சன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இன்று(4) முடக்கப்படாத பகுதிகளில் 200 பீ.சீ.ஆர். மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தின் கீழ் மருதமுனையின் பொதுநூலக வீதி மற்றும் அல்-மனார் வீதியின் ஒருபகுதி என்பவற்றில் பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் இடம்பெற்றன.

பாதுகாப்புக் கடமைகளில் இராணுவத்தினர் மற்றும் மேலதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த சில தினங்களில் எடுக்கப்பட்ட பீ.சீ.ஆர். முடிவுகளின் படி மருதமுனைப் பிரதேசம் அதிக கவனத்துக்குரிய பிரதேசமாக மாறியிருப்பதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி தெரிவித்துள்ளார்.

மருதமுனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(2) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற சுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் மருதமுனை 3 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையை கவனத்தில் கொண்டு சுகாதார நிபந்தனைகளுடன் தற்போது முடக்க நிலைய நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.