இடைநிறுத்திய சந்தாங்கேணி மைதான அபிவிருத்திப் பணியை தொடர ஹரீஸ் எம்.பி உடனடி நடவடிக்கை.

(மாளிகைக்காடு நிருபர்) அரசியல் ஆதாயங்களுக்காகவும், தற்பெருமை விளம்பரங்களுக்காகவும் சதி முயற்சியினால் நிறுத்தப்பட்ட கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தியை மீள ஆரம்பிக்க கோரி கல்முனை பிராந்திய 26 முன்னணி விளையாட்டு கழகங்களின் கோரிக்கை கடிதம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களிடம் கல்முனை விளையாட்டு கழகங்களின் பிரச்சினைகள், வீரர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் இம்மைதான அபிவிருத்திப்பணியை அவசரமாக ஆரம்பிக்குமாறு அமைச்சருக்கு முன்வைத்த வேண்டுகோளின் பிரகாரம் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தி பணியை உடனடியாக முன்னெடுக்க உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திப்பணிகளை மீள ஆரம்பிக்க வேண்டிய தேவைக்காக கல்முனை பிராந்திய முன்னணி கழகங்களான விக்ட்டோரியஸ் வி.கழக தலைவரும்இ முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். றியாஸ், விர்லியண்ட் வி.கழக தலைவரும் கடந்த மாநகர சபை வேட்பாளருமான எம்.எஸ்.எம். பழில் உட்பட முன்னணி கழகங்களின் நிர்வாகிகள் முன்னின்று ஒருங்கமைத்த கோரிக்கை கடிதம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பணிப்பாளர் நாயகத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக இருந்தபோது சந்தாங்கேணி மைதானத்தை தேசிய மைதானமாக்கும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிடலின் பிரகாரமே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.