பொத்துவில் பிரதேசத்தில் வயற்காணிக்குள் நின்றவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

வி.சுகிர்தகுமார்

  பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கிராங்கோவை, உடகோவை, மூங்கில் சோலை, கிணற்றடி வாய்க்கால் ஆகிய கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்களின் வயற்காணிகளில் நின்றவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி கண்டங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணியில் சட்ட ரீதியான அங்கிகாரத்துடன் வேளாண்மை செய்துள்ள போதிலும் தங்களுக்கு இதுவரைக்கும் பசளை வழங்கப்படவில்லை என்று இந்த விவசாயிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்கள்.

வேளாண்மை செய்கை பண்ணப்பட்ட காலம் முதல் இன்று வரைக்கும் வேளாண்மையின் வளர்ச்சிக்குரிய பசளை இடப்பாடாதுள்ளமையால் வேளாண்மையின் வளர்ச்சி குன்றியுள்ளதுடன், வேளாண்மை மஞ்சள் நிறமுடையதாக மாறிக் கொண்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தார்கள்.

தங்களுக்கு பசளை வழங்கினால் மாத்திரமே வேளாண்மை செய்கைக்காக செய்துள்ள முதலீட்டை பெற்றுக் கொள்ள முடியும். இல்லாது போனால் மீள முடியாத நஸ்டத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தார்கள்.

இதே வேளை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தங்களுக்கு வழங்குவதற்காக பொத்துவில் விவசாய கமநலச் சேவைகள் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பசளைகளில் ஒரு தொகையினை அரச அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாகவும் இவர்கள் தெரிவித்தார்கள்.

சட்ட ரீதியாக வேளாண்மை செய்துள்ள எங்களுக்கு பசளை வழங்காது, பசளையை திருப்பி அனுப்பியமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தார்கள்.

இதே வேளை, விவசாயிகள் தாங்கள் சட்ட ரீதியாக வேளாண்மை செய்துள்ளமைக்கும், வழக்கு தாக்கதல் செய்தமைக்குரிய ஆவணங்களையும் காண்பித்தார்கள்.

ஆகவே குறித்த அரச அதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் எனவும் தங்களுக்கு அரசாங்கத்தினால் தக்க தீர்வு வழங்கப்படவேண்டும் எனவும் விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்